Last Updated : 25 Jun, 2019 12:00 AM

 

Published : 25 Jun 2019 12:00 AM
Last Updated : 25 Jun 2019 12:00 AM

குண்டு வெடிப்புச் சம்பவங்களை விசாரிக்க இந்தியாவிடம் உதவி கோரும் இலங்கை தளபதி

கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களை விசாரிக்க இந்தியாவின் உதவி தேவை என அந்நாட்டு ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்.21 ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்களில் மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டு 258 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

ஐஎஸ் தாக்குதல் குறித்து இந்தியா எச்சரித்தும் இலங்கை அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிட்டனர்.

அதன்பின் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, தலைவராக ஜஹ்ரான் ஹாசிமின் என்பவர் செயல்பட்டதாகவும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்புதான் இதற்குக் காரணம் என்றும் இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து அந்த அமைப்புக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டது.

இலங்கை தாக்குதலில் தொடர்புடைய நபர்கள், தமிழகத்தில் தங்கி இருக்கலாம் என தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகித்தனர். அதனால் தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்த விசாரணையின்போது கேரள மாநிலம், பாலக்காடு மற்றும் தமிழகத்தில் கோவையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையின் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க நேற்று கூறும்போது, ‘‘இலங்கை தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதக் குழுவுக்கு தொடர்புள்ளதால் இந்தியாவின் உதவியும் அவசியமாகும். இதற்காக இரண்டு நாட்டு ராணுவத்துக்கும் இடையில் தொடர்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

முன்னதாக, இலங்கை குண்டுவெடிப்புகள் குறித்து இலங்கை அரசு நடத்தி வரும் விசாரணைகளில் இணைந்து கொள்வதற்கு, இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்புக்கு இந்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x