Published : 19 Jun 2019 04:41 PM
Last Updated : 19 Jun 2019 04:41 PM

வடகொரிய சுற்றுப்பயணம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும்: ஜி ஜின்பிங்

வடகொரியாவில் தான் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்   நாளை (வியாழக்கிழமை) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வடகொரியா செல்ல இருக்கிறார். வடகொரியா போன்ற தனிமைப்படுத்தப்பட்ட நாட்டிற்கு கடந்த 14 ஆண்டுகளில் பயணம் செய்யவுள்ள முதல் சீனத் அதிபர் ஜி ஜின்பிங்தான்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் பயணம் குறித்த செய்தி வடகொரியாவின் ரோடங் சின்மன் செய்தித்தாளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பயணம் குறித்து  சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, ''வடகொரியாவுடன்  பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் கொரிய தீபகற்பகத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு சீனா தீவிரமான பங்களிப்பை அளிக்க முடியும்'' என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதன் பிறகு இருநாடுகளிடையே தொடர்ந்து அவ்வப்போது மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x