

டெல் அவிவ்: பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் இந்தியா - இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அரசு முறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார். அப்போது பிரதமர் மோடி போல, இந்திய பாரம்பரிய உடையை அவர் அணிந்திருந்தார். மோடி ஜாக்கெட், குர்தா அணிந்திருந்த அவர், மோடியை ஆரத் தழுவி வரவேற்றார்.
முன்னதாக, இருவரும் இணைந்து ஜெருசலேமில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியை பார்வையிட்டனர். ஹிட்லர் ஆட்சியின்போது கொல்லப்பட்ட யூதர்கள் நினைவாக ஜெருசலேமில் அமைக்கப்பட்டுள்ள ஹோலோகாஸ்ட் நினைவு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு, உயிரிழந்த யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.
பின்னர், வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து மோடியும், நெதன்யாகுவும் முக்கிய ஆலோசனை நடத்தினர். நிறைவாக, அவர்களது முன்னிலையில் இந்தியா - இஸ்ரேல் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 10 முக்கிய அறிவிப்பு களும் வெளியிடப்பட்டன.
குறிப்பாக வேளாண்மை தொழில் நுட்பங்கள், செயற்கைக் கோள் தரவுகள், யுபிஐ பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிறகு, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது:
பிரதமர் மோடி: வர்த்தகம், புதுமை கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியா - இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
செயற்கை நுண்ணறிவு, குவான்டம், அரியவகை கனிமங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். யுபிஐ பணப் பரிமாற்ற நடைமுறையை இஸ்ரேலில் அமல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்கள் தயாரிக்க, தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அணுசக்தி, விண்வெளி, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
இந்தியா, இஸ்ரேல் வேளாண்மை புதுமை கண்டுபிடிப்பு மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்தின் விவசாயத்திலும் இஸ்ரேலிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படும். இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும். இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஐ2,யு2 கூட்டமைப்பு வலுப்படுத்தப்படும். காசா அமைதி திட்டத்துக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.
பெஞ்சமின் நெதன்யாகு: எனது மனைவி சாராவை முதல்முறையாக டெல் அவிவ் நகரில் உள்ள இந்திய ஓட்டலில்தான் சந்தித்தேன். இதற்காக இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் கடன்பட்டிருக்கிறேன்.
இஸ்ரேல் - இந்தியா இடையே ‘ஜி2ஜி‘ கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். செயற்கை நுண்ணறிவு,தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.