“ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்” - தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். உடன் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். உடன் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி.

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள்கட்சி மற்றும் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, விசிக,நாதக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்குச் சென்றதால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அக்கட்சியின் கருத்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் தயார்நிலை, வாக்கு எண்ணும் மையங்கள், தேவையான பாதுகாப்பு படையினர், பறக்கும் படைகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தார்.

இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு,செய்தியாளர்களிடம் கட்சித்தலைவர்கள் கூறியதாவது:

பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன்: வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க திமுக நிர்வாகிகள் இப்போதே தயாராக எடுத்து வைத்துவிட்டனர். அதைக் கண்டறிந்து வருமான வரித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல் துறை முக்கிய அதிகாரிகள், புகாரில் சிக்கியுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பள்ளி தேர்வு, பண்டிகை போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு: வாக்குச்சாவடி முகவர்களுக்கு கொடுக்கும் பட்டியல் - தேர்தல் ஆணையத்திடம் உள்ள பட்டியல் இடையே வித்தியாசம் உள்ளது. இதனால் புதிய வாக்காளர்கள் விவரம் தெரியவில்லை. இதை சரிசெய்ய வேண்டும். பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் ஒரே விதிகளை பின்பற்றவேண்டும் என வலியுறுத்தினோம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: விதிமீறல்களைத் தடுக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும். பாரபட்சமின்றி அனைத்துக் கட்சிகளுக்கும் பிரச்சார அனுமதி வழங்க வேண்டும்.

பறக்கும் படையில் மாநில அரசு ஊழியர்களுக்கு பதிலாக மத்திய அரசு ஊழியர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவுடன் ஆளுங்கட்சி பேனர்களை அகற்ற வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களை தேர்தல் ஆணையமே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். பணம் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் சார்பில் வலியுறுத்தினோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைமை தேர்தல் ஆணையரிடம் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த மனுவில், ‘தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். பிரச்சாரம் செய்யும் அவகாசத்தை 40 நாட்களாக அதிகரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் செலவினத்தை கண்காணிப்பது, வங்கி அதிகாரிகளுடன் இணைந்து பணப் பரிவர்த்தனை, டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை கண்காணிப்பது, பணப் பட்டுவாடாவை தடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

<div class="paragraphs"><p>தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார். உடன் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி.</p></div>
‘திருத்தணி பேருந்து நிலையத்துக்கு மபொசி பெயரை மாற்றி கருணாநிதி பெயரா?’ - சீமான் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in