Published : 27 Sep 2014 10:25 AM
Last Updated : 27 Sep 2014 10:25 AM

உலக மசாலா: சீன ஆசிரியரின் 10 ஆயிரம் காகித விமானங்கள்

சீனாவின் சிச்சுவான் பகுதியில் வசிக்கிறார் ஜு ஸுக்வான். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான இவர், கடந்த 60 ஆண்டுகளாக ஓரிகாமி காகித உருவங்களைச் செய்து வருகிறார். சுமார் 10 ஆயிரம் விமானங்களைச் செய்து அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு விமானமும் அளவுகளிலும் வண்ணங்களிலும் செய்முறைகளிலும் வித்தியாசமானது. இது ஓரிகாமியை விடக் கஷ்டமான கலை. ஜப்பானின் ஓரிகாமிக்கு முன்பே சீனாவில் தோன்றியது ஜெஸி கலை என்கிறார் ஸுக்வான். விமானங்கள் மட்டுமின்றி, ஏராளமான காகித பொம்மைகளையும் செய்து வைத்திருக்கிறார்!

பாடம் சொல்லிக் கொடுத்தது போக எவ்வளவு வேலை செஞ்சிருக்கீங்க! டைம் மேனேஜ்மெண்ட் பத்தி உங்ககிட்டதான் கத்துக்கணும் ஸுக்வான்!

சடோஷி அராகி டோக்கியோவைச் சேர்ந்த கலைஞர். தினசரி நாம் பார்க்கும் வாகனங்கள், நகரங்கள், சந்தைகள் போன்றவற்றை அப்படியே மினியேச்சர் வடிவமாக மாற்றி விடுகிறார். அதிலும் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மாசு, போர்ச் சூழல் போன்றவற்றைத் தன்னுடைய மினியேச்சர் வடிவங்களால் காட்சிப்படுத்திவிடுவதுதான் இவருடைய சிறப்பு. ஸ்கூட்டர் ஸ்டாண்ட், குப்பைக்கூடம், உடைந்த கார், பாழடைந்த வீடு போன்றவை கூட சடோஷியின் கைவண்ணத்தில் அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன!

சின்ன விஷயங்களை எல்லாம் பெரிசா செஞ்சு பேர் வாங்குற காலத்தில், பெரிய விஷயங்களைச் சின்னதாகச் செஞ்சு அசத்தறீங்க சடோஷி!

மனித வாழ்க்கையில் திருமணம் மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் நடுவானில் திருமணம், கடலுக்கு அடியில் திருமணம் என்பதெல்லாம் இப்பொழுது பழைய விஷயங்களாகிவிட்டன. யாரும் எதிர்பாராத தீம்களில், இடங்களில் திருமணம் செய்துகொள்வதுதான் சமீபத்திய ஃபேஷனாக இருக்கிறது. பாத் டப், துப்பாக்கிகள், கடற்கரை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் என்று விதவிதமான தீம்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன! வித்தியாசமான இந்தத் திருமணப் புகைப்படங்களை இணையத்தில் ஏற்றி, எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கத்தான் இப்படிப் படாதபாடு படுகிறார்கள்!

ம்ம்… திருமண வாழ்க்கையை நல்லபடியா கொண்டு போக படாதபாடுபட்டால் பரவாயில்லை! திருமணத்துக்கேவா…?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x