Published : 27 Mar 2018 09:24 AM
Last Updated : 27 Mar 2018 09:24 AM

பொய் செய்தி விவகாரம் மலேசிய அரசின் சட்டம் ஏற்புடையதா?- மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

மலேசிய அரசின் புதிய சட்டம் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறியதாவது:

கே.எம்.விஜயன்: மலேசிய அரசின் இந்த சட்டம் ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்தையும் நசுக்கும். சர்வதேச சட்டத்தில் மனித உரிமை மீறல், கருத்து சுதந்திரம் போன்றவற்றிற்கு பிரத்யேக உரிமைகள் உள்ளது. ஒரு செய்தி பொய் செய்தியா? அல்லது உண்மை செய்தியா? என்பதை சட்டப்படி நிரூபிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்குதான் உள்ளது. அதற்காக நிரூபிக்க முடியாத எல்லா செய்தியும் பொய் செய்தியாகி விடாது. அனைவருக்கும் கண்கூடாகத் தெரிந்த ஊழலை அம்பலப்படுத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை என்றால் அதன்மூலம் அரசாங்கத்திற்கு எதிராக எந்த செய்தியும், யாரும் வெளியிடக்கூடாது என்ற கொடுங் கோல் ஆட்சியின் அடக்குமுறைதான் வெளியே தெரிகிறது.

பி.குமார்: இப்படி ஒரு சட்டத்தை மலேசிய அரசு நிறைவேற்றினால் அது 100 சதவீதம் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. மலேசியாவில் நடக்கும் ஊழல்களை ‘எக்கனாமிஸ்ட்’ என்ற ஊடகம் வெளிப்படையாக அம்பலப்படுத்தியுள்ளது. இந்த சட்டமசோதா அதன் தாக்கமாகக்கூட இருக்கலாம். பொய் செய்தி வெளியிட்டால் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் என்றால் ஒட்டுமொத்த ஊடக சுதந்திரமும் பறிபோய் விடும்.

யாரும் அந்த நாட்டு அரசின் செயல்பாடுகளைப் பற்றி எந்த கருத்தையும் வெளிப்படுத்த முடியாது. இதுபோன்ற சட்டங்களை மலேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றக்கூடாது. மலேசியாவிலேயே இதுபோன்ற சட்டங்கள் வரக்கூடாது எனக் கூறும் போது இந்தியாவில் கொண்டுவந்தால் ஜனநாயகம் இருக்காது. மீண்டும் மன்னராட்சி தான் நடக்கும்.

ஏ.சிராஜுதீன்: தேர்தல் நேரங்களில் தங்களுக்கு ஆதரவாளர்கள் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் பொய் செய்தி வெளியிட்டு மக்கள் மனதில் விஷவிதைகளை விதைக்கும் ஊடகங்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மலேசிய அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது என்பது தான் என்னுடைய கருத்து.

தேர்தல் முடிவுகளை எல்லா நாடுகளிலும் ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன. தேர்தலுக்கு முன்பே பொய் செய்தி வெளியிட்டால் 10 ஆண்டு சிறை என மலேசிய அரசு துணிச்சலாக அறிவித்துள்ளது. இதன்மூலம் உண்மை செய்தி வெளியிடுபவர்களுக்கு என்ன பாதிப்பு வரப்போகிறது?

ஏனெனில் பொய் செய்திகளை தேர்தலுக்கு முன்பாகவே கட்டுப்படுத்தவில்லை என்றால், அதன் தாக்கம் தேர்தலில் எதிரொலித்துவிடும். இதுபோன்ற சட்டங்கள் இந்தியாவில் வந்தால் நிச்சயம் ஊடகங்களின் தரம் இன்னும் மேம்படும். ஆனால் அதற்காக வெளிநாட்டு ஊடகங்களை மலேசிய அரசு ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர்கள் தெரிவி்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x