Published : 31 Mar 2018 08:39 AM
Last Updated : 31 Mar 2018 08:39 AM

உலக மசாலா: பூனைக்கு மாற்றுச் சிறுநீரகம்

மெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கும் ஸ்டான்லி பூனைக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது! 17 வயது ஸ்டான்லிக்குச் சுமார் 12.5 லட்சம் ரூபாய் செலவு செய்து, வெற்றிகரமாகச் சிகிச்சையை நடத்தி முடித்திருக்கிறார் பெட்ஸி பாய்ட். இவர் பகுதி நேரப் பேராசிரியராக இருக்கிறார். கணவர், இரட்டை ஆண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பூனைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் வளர்க்கும் பூனைகளில் ஒன்று ஸ்டான்லி. 2016-ம் ஆண்டு பூனையின் உடல் நிலை சரியில்லாமல் போனது. மருத்துவப் பரிசோதனை செய்ததில் சிறுநீரகப் பாதிப்பு தெரிந்தது. ஸ்டான்லி 3 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். இருக்கும் நாட்களில் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் பெட்ஸி. மருத்துவர் சொன்ன கெடுவையும் தாண்டி ஸ்டான்லி வாழ்ந்துகொண்டிருந்தது.

“என்னிடம் இருக்கும் பூனைகளில் ஸ்டான்லி ரொம்பவே தனித்துவமானவன். நாய்க்கு உள்ள அறிவும் மனிதர்களிடமிருக்கும் அன்பும் இதனிடம் உண்டு. கண்களால் சொல்வதைக் கூடப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்படுவான். ஒருநாளும் எல்லை மீறியதில்லை. மிகவும் பொறுமையாக இருப்பான். தினமும் என் அறைக் கதவு திறக்கும்வரை காத்திருப்பான். மிகவும் புத்திசாலி. கெடு தாண்டியும் இவனால் உயிரோடு இருக்க முடிகிறதென்றால், இவனுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. மருத்துவர்களும் ஸ்டான்லியின் உடல் சிகிச்சைக்குத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் இன்னொரு பூனையிடமிருந்து சிறுநீரகம் நன்கொடை பெறுவதற்காகக் காத்திருந்தோம்.

5 மாதங்களுக்கு முன்புதான் ஒரு பூனையைத் தத்தெடுத்து, அதன்மூலம் சிறுநீரகம் பெற்று, ஸ்டான்லிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, 4 மாதங்களாகிவிட்டன. இரண்டு பூனைகளும் நன்றாக இருக்கின்றன. ஸ்டான்லி சக பூனைகளோடு சேர்ந்து விளையாடுகிறது. என்னுடன் வெளியில் வருகிறது. இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருந்துகளும் தேவைப்படாது. பூனைகள் அதிகபட்சமாக 17 ஆண்டுகள் வரையே வாழக்கூடியவை. அதனால் 17 வயது ஸ்டான்லிக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று குடும்பத்தினரும் நண்பர்களும் கேட்டனர். அப்படியே செலவு செய்தாலும் அது வெற்றியடையுமா என்று தெரியாது என்றார்கள். என் குழந்தைகளின் எதிர்காலத்துக்குச் சேமித்து வைத்த பணத்தைதான் நான் ஸ்டான்லிக்குக் கொடுக்கிறேன் என்பதால் அவர்களின் கேள்வி நியாயமானதுதான். ஆனால் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து, என் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டது ஸ்டான்லி. செலவு செய்தது வீண் போகவில்லை. 25 வயது வரை வாழும் என்று தோன்றுகிறது. இன்னும் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். என் அன்பு ஸ்டான்லிக்குச் செலவு செய்தது குறித்து எனக்குச் சிறிதும் வருத்தம் இல்லை. மகிழ்ச்சி யாக இருக்கிறேன்” என்கிறார் பெட்ஸி பாய்ட்.

பூனைக்கு மாற்றுச் சிறுநீரகம் பொருத்திய பெட்ஸி வாழ்க!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x