Published : 14 Mar 2018 09:39 AM
Last Updated : 14 Mar 2018 09:39 AM

உலக மசாலா: மன வலிமை மிக்க பூனை

ண்டனில் ஜிஞ்சர் என்ற பூனை மாடியிலிருந்து தாவிக் குதிக்கும்போது கம்பி வேலியில் விழுந்துவிட்டது. மூன்று கம்பிகள் பூனையின் உடலைத் துளைத்துக்கொண்டு மேலே வந்துவிட்டன. வலியில் அசையாமல் படுத்திருந்தது பூனை. அந்த வழியே வந்தவர்கள் பூனைக்கு உதவுவதற்காகக் களத்தில் இறங்கினர். மீட்புக் குழு ஒன்று வந்து பூனையை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தது. "சாதாரணமாக மூன்று கம்பிகள் குத்தினால் பூனை உயிர்ப் பிழைக்க வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தப் பூனையைத் துளைத்த கம்பிகள் உடலுக்குள் இருந்த எந்த உறுப்பையும் பாதிக்கவில்லை என்பதால் உயிர் பிழைத்திருக்கிறது. மிகவும் ஆச்சரியமான விஷயம் இது. கம்பியில் சொருகியிருந்தபோதும் எடுத்தபோதும் சிகிச்சையின்போதும் ஜிஞ்சர் அழவே இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம். இந்த மன தைரியத்தால் பூனை வேகமாகத் தேறிவருகிறது” என்கிறார் மீட்புக் குழுவைச் சேர்த ப்ரூஸ்டர்.

மன வலிமை மிக்க பூனை!

சீ

னாவின் ஹர்பின் பகுதியைச் சேர்ந்த 50 வயது சென் என்ற பெண்ணுக்குக் கல்லீரல் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு மதுப் பழக்கம் இல்லை. நீண்ட காலம் மருந்துகளையும் எடுத்துக்கொண்டதில்லை. இவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்கு முதலில் ஏன் கல்லீரல் பாதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. பிறகு சென்னிடம் நீண்ட நேரம் உரையாடினார்கள். அதில் கடந்த 10 ஆண்டுகளாகத் தலைக்கு டை போட்டு வருவதாகச் சொன்னார். நீண்ட காலமாக டை உபயோகித்து வந்ததால் இவரது கல்லீரல் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவரது உடலில் வழக்கமாக இருக்கும் அளவை விட 10 மடங்கு பிலிருபின் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு மாடிப் படி ஏறும்போது மிகவும் களைப்பாகவும் மூச்சு விடுவதில் சிரமமாகவும் இருந்திருக்கிறது. ஆனாலும் மெதுவாக ஏறி படுக்கையறைக்குச் சென்றுவிட்டார் சென். இவரைப் பார்த்த கணவருக்கு அதிர்ச்சி. சென்னின் தோல் மஞ்சளாகவும் கண்கள் வெள்ளையாகவும் மாறியிருந்தன. உடனே மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இதில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும் கல்லீரலின் பாதிப்பைக் குறைக்க முடியவில்லை. புற்றுநோய் வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். “எனக்கு 30 வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிட்டது. 40 வயதில் நரை அதிகமாகிவிட்டதால் டை பயன்படுத்த ஆரம்பித்தேன். பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். அது என் உயிருக்கே ஆபத்து விளைவித்துவிடும் என்று நான் நினைக்கவே இல்லை” என்று வருந்துகிறார் சென். ”டைகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகம் இருக்கின்றன. தலையில் போடும் டை, உச்சந்தலை வழியாகக் கல்லீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று இப்போதுதான் தெரிகிறது. டை போடுவது அவசியம் என்று கருதுபவர்கள் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் டையைப் பயன்படுத்தலாம். ரசாயன டைகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் மருத்துவ நிபுணர் ஃபு லிஜுவான்.

நரைக்கு பயந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x