Published : 10 Mar 2018 10:54 AM
Last Updated : 10 Mar 2018 10:54 AM

வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள மசூதிகளில் பாதுகாப்புக்கு வீரர்கள் குவிப்பு

இலங்கையில் இனக்கலவரம் தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் சிறப்பு தொழுகையின் போது அசம்பாவிதங்களை தடுக்க, மசூதிகளில் ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.

இலங்கையில் கடந்த வாரம் புத்தமதத்தைச் சேர்ந்த ஒருவர் தனிப்பட்ட சண்டையில் கொல்லப்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த புத்தமதத்தினர் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 முஸ்லிம்கள் பலியாயினர். அதன்பின் இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. வன்முறை அதிகமாகவே கடந்த 6-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு எமர்ஜென்சியை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார். கண்டியில் ஊரடங்கும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியிடம் கொழும்புவில் தீவிர விசாரணை நடக்கிறது.

இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் சிறப்பு தொழுகையின் போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க மசூதிகளில் ராணுவ வீரர்கள் ஏராளமானோர் குவிக்கப்பட்டனர். குறிப்பாக கண்டி மாவட்டத்தில் மட்டும் 3000 போலீஸார், 2,500 ராணுவ வீரர்கள், 750 சிறப்பு அதிரடி படையினர் மசூதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். தலைநகர் கொழும்பில் உள்ள மசூதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

எனினும், கொழும்பு, கண்டி உட்பட பல பகுதிகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து கண்டியில் பதற்றம் நிலவுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x