Published : 14 Mar 2018 09:43 AM
Last Updated : 14 Mar 2018 09:43 AM

அமைதி பேச்சுக்கு தலிபான்கள் விருப்பம்: அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுவரும் தலிபான்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேத்திஸ் கூறியுள்ளார்.

கடந்த 2001 அக்டோபரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போரில் அமெரிக்க கூட்டுப் படையைச் சேர்ந்த 1,40,000 வீரர்கள் பங்கேற்றனர். சுமார் 70 நாட்கள் நீடித்த போரில் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்டு புதிய அரசு ஏற்படுத்தப்பட்டது.

அதன்பின் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. தற்போது அந்த நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதி அரசுப் படைகளின் கட்டுப்பாட்டிலும் ஒரு பங்கு தலிபான்களின் வசமும் உள்ளன.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் அந்த நாட்டு படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டன. தற்போது ஆப்கானிஸ்தானில் 14,000 அமெரிக்க வீரர்கள் மட்டும் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அரசுப் படைகளுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மைகாலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜிம் மேத்திஸ் நேற்று திடீர் பயணமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றார். அங்கு அமெரிக்க படையின் தளபதி ஜான் நிக்கல்சனை சந்தித்துப் பேசிய அவர் பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் அமைச்சர் ஜிம் மேத்திஸ் சந்தித்துப் பேசினார்.

அவர் நிருபர்களிடம் கூறியபோது, “ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தலிபான்களின் மூத்த தலைவர்கள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித் தார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி அண்மையில் வெளியிட்ட அரசியல் தீர்வு திட்டத்தில், “ஆயுதங்களைக் கைவிட்டால் தலிபான் அமைப்பை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று அறிவித்தார். இதை தலிபான் தலைவர்களில் ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x