Last Updated : 17 Apr, 2019 07:02 PM

 

Published : 17 Apr 2019 07:02 PM
Last Updated : 17 Apr 2019 07:02 PM

மசூத் அசார் விவகாரத்தில் ஐநாவின் மீது திணிக்கப்படும் முடிவை உறுதியாக எதிர்க்கிறோம்: சீனா திட்டவட்டம்

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்ற அமெரிக்க முடிவுக்கு சீனா செவிசாய்க்க மறுத்துள்ளது.

 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 கமிட்டி மூலம் இது தொடர்பாக கருத்திசைவு ஏற்படுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை விடுத்து சம்பந்தபட்ட அரசுகள் ஒரு தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீது திணிக்கப் பார்க்கின்றனர், இதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 

சீனாவின் இந்த முடிவு மீது இந்தியா ஏமாற்றம் தெரிவிக்க, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் சீனாவின் மீது விமர்சனக் குரல்களை எழுப்பியுள்ளன. கடந்த மாதம் அமெரிக்க அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “சுமார் 10 லட்சம் முஸ்லிம் மக்களை தங்கள் நாட்டில் அடக்கியாளும் சீனா, ஐநா தடையிலிருந்து ஒரு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பைக் காக்கிறது” என்று சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக சீனா வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் லூ கூறும்போது, “இது தொடர்பாக சீனாவுக்கு ஏப்ரல் 23 இறுதிக்கெடு விதித்திருப்பதான செய்திகள் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன என்று தெரியவில்லை. 1267 கமிட்டி இது தொடர்பாக தெளிவான விதிகளையும் நடைமுறைகளையும் கொண்டுள்ளது, உங்களுக்கு ஏதாவது தெளிவு வேண்டுமெனில் அவர்களைக் கேட்கலாமே.

 

சீனாவின் நிலைப்பாடு தெளிவானது, இது தொடர்பாக கூட்டு ஒப்புதல் மூலமே முடிவு எட்டப்பட வேண்டும். பெரும்பாலான உறுப்பினர்களின் ஒப்புதல் மட்டுமே இதற்கு தீர்வாக முடியும். 1267 கமிட்டிதான் இதை முடிவு செய்ய வேண்டும், இந்த கமிட்டியைத் தாண்டிப் போய் முடிவெடுக்க முடியாது.  ஆனால் சம்பந்தப்பட்ட நாடுகள் ஒரு முடிவை ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீது திணிக்கப் பார்க்கின்றன, இதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்” என்று திட்டவட்டமாக அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x