Last Updated : 13 Mar, 2019 03:39 PM

 

Published : 13 Mar 2019 03:39 PM
Last Updated : 13 Mar 2019 03:39 PM

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா: ஐ.நா.வில் நாளை முடிவு

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முயற்சித்து வரும் நிலையில், அவ்வாறு அறிவிக்க மீண்டும் தடை ஏற்படுத்துவோம் என்று சீனா சூசகமாகத் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், புல்வாமாவில் கடந்த மாதம் 14-ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில்ன் பாலகோட் பகுதியில் செயல்பட்டுவரும் ஜெய்ஷ் இ முகமது முகாம்களை இந்திய விமானப்படை கடந்த மாதம் 26-ம் தேதி குண்டுவீசி அழித்ததாகக் கூறப்பட்டது.

இந்த சூழலில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரானஸ், இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் நிலை என்னாகும், நிறைவேற்றப்பட்டு சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்படுவாரா அல்லது, தீர்மானம் நீர்த்துப்போகுமா என்பது நாளைக்குள் தெரியவரும்.

இது குறித்து சீனா வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லூ காங் நிருபர்களிடம் கூறுகையில், " நாங்கள் மீண்டும் கூறுகிறோம், சீனா தொடர்ந்து பொறுப்புள்ள மனநிலையில்தான் செயல்படும். மசூத் அசாருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தால், அவசரம்காட்டமாட்டோம். இந்த விஷயத்தில் அனைவரின் ஒப்புதலோடு செயல்பட்டு முறைப்படி அனுக வேண்டும். இதுதொடர்பாக விவாதங்கள் நடத்தப்பட்டு, முறைப்படி அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றபின்புதான் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் " எனத் தெரிவித்தார்.

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா மூன்று முறை முயன்றும் அந்த முயற்சிகளை சீனா தடை செய்தது. இப்போது அனைத்துதரப்பினரும் ஒப்புதல் பெற்றபின்புதான் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கூறியிருப்பதால், மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள தீரமானத்தை, தனக்குரிய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்வோம் என்று மறைமுகமாக உணர்த்தி இருக்கிறது.

இதற்கிடையே சீனா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காங் சுவான்யு, சமீபத்தில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அங்கு பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஓமர் ஜாவித் பஜ்வா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து பேச்சு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை ஐ.நா.வில் இந்தியா பேசுகையில், " பாகிஸ்தானில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி அளித்து வருவது ஐ.நா.வில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரியும். ஆதலால்  அவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் " என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x