Published : 20 Mar 2019 05:54 PM
Last Updated : 20 Mar 2019 05:54 PM

வெள்ளத்தில் சிக்கியுள்ள தெற்கு ஆப்பிரிக்க மக்களுக்கு உதவுங்கள்: போப் வேண்டுகோள்

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இடாய் புயல் தாக்கியதால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் ஆறுதலும் நல்கி உதவுமாறு போப் ஆண்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கனோர் மத்தியில் அவர் தெரிவித்ததாவது:

''மொஸாம்பிக், ஜிம்பாப்வே மற்றும் மலாவி நாடுகளின் பல்வேறு பிராந்தியங்களில் மாபெரும் வெள்ளம் புகுந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மிகுந்த வேதனையைத் தந்துள்ளது. அந்த அன்பான மக்களுக்கு என் வேதனையையும் என் ஆறுதலையும் வெளிப்படுத்துகிறேன்.

வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கடவுளின் கருணைக்காக ஒப்படைக்கிறேன். இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் ஆறுதலையும் ஆதரவையும் அளிக்கிறேன்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் ஆறுதலும் நல்கி அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்''.

இவ்வாறு போப் பிரான்ஸிஸ் கேட்டுக்கொண்டார்.

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இடாய் புயலின் பயங்கர தாக்குதலுக்கு கடந்த வாரம் 300 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிமிடம் வரை பேரிடர் மீட்புப் படையினர் உயர்ந்த கட்டிடங்களின் கூரைகள் மற்றும் மரங்கள் வரை உயர்ந்து நிற்கும் வெள்ள நீரிலிருந்து மீட்கப் போராடி வருகின்றனர்.

பல பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்பிராந்தியத்தில் இதுதான் மோசமான புயல் என்றும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்புயலில் பாதிப்படைந்துள்ளதாகவும் ஐநா சபை தெரிவித்துள்ளது.

போப் பிரான்ஸில் வரும் செப்டம்பரில் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது மொஸாம்பிக் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x