Published : 04 Mar 2019 12:21 PM
Last Updated : 04 Mar 2019 12:21 PM

‘‘உயிருடன் இருக்கிறார் மசூத் அசார்; சொந்த ஊரில் ரகசிய சிகிச்சை’’ - பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்

ஜெய்ஷ் - இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்ததாக வெளியான தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் மறுத்துள்ளன. அதேசமயம் அவர் ராணுவ மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  தாக்குதல் நடத்தி அழித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

அதேசமயம், இந்திய விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது.  அதில் இருந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் உயிருடன் கைது செய்தது. சர்வதேச நாடுகளின் நெருக்கடி, மத்திய அரசின் நடவடிக்கைகளால் அபிநந்தனை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது.

இந்தியா - பாகிஸதான் இடையே தற்போது பதற்றம் ஏற்படுவதற்கு காரணம் ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பு. அதன் தலைவர் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அதேசமயம், அவர் பாகிஸ்தானில் இருப்பதை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி அண்மையில் ஒப்புக்கொண்டார்.

மசூத் அசார் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அடிக்கடி டயாலிசிஸ் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. ராவல் பிண்டி நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை சர்வதேச ஊடகங்களும் உறுதிபடுத்தின. இந்தநிலையில், கடந்த 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத முகாமை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தபோது, அதில் பலத்த காயமடைந்ததாகவும், ராவல்பிண்டி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்து விட்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. மசூத் அசாருக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் அவர் மரணமடையவில்லை என பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் ராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதால் பாகிஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் அவரது சொந்த ஊரான பஹல்பூருக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்கு வீட்டிலேயே வைத்து ரகசியமாக சிகிச்சை நடைபெறுவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதுபற்றி எந்த தகவலையும் வெளியிட பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அமைச்சர் பவேத் சவுத்திரி, மசூத் அசார் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். மசூத் அசாருக்கு எதிராக சர்வதேச நாடுகளும் நெருக்கடி கொடுத்து வருவதால் பாகிஸ்தான் மவுனம் சாதித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x