Last Updated : 09 Feb, 2019 01:45 PM

 

Published : 09 Feb 2019 01:45 PM
Last Updated : 09 Feb 2019 01:45 PM

கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா சர்ச்சை எதிரொலி: இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் கெடுபிடி

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில்  அரசியல் விளம்பரங்களுக்கு  ஃபேஸ்புக்பல்வேறு கெடுபிடிகளையும் விதித்திருக்கிறது.

இந்த புதிய கெடுபிடிகள் வரும் 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்ததாக புகார் எழுந்தது.

இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

தற்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கேம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா சர்ச்சை எதிரொலியால் உஷாரான ஃபேஸ்புக் நிறுவனம் அரசியல் விளம்பரங்களுக்கு பல்வேறு கெடுபிடிகளையும் விதித்திருக்கிறது.

என்னென்ன கெடுபிடிகள்?

1. அரசியல் விளம்பரங்களுக்கு கீழ் பிரசுரித்தது யார், கட்டணம் செலுத்தியது யார், என்பதை தெரிவிக்கும் வகையில் (published by)  (paid by) என  இரண்டு பொறுப்பு துறப்பு வாசகங்கள் இடம்பெறும்.

2. அரசியல் விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது. எந்தெந்த பகுதிகளில் குறிப்பிட்ட விளம்பரம் அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறது என்ற தகவல்களைத் தெரிந்து கொள்ள ஒரு ஆவண வசதி ஃபேஸ்புக்கிலேயே ஏற்படுத்தப்படும்.

3. அரசியல் ஆதரவு ஃபேஸ்புக் பக்கத்தையோ நிர்வகிக்கும் நபர் உலகின் எந்தப் பகுதியில் இருந்து அதை நிர்வகிக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்படும். குறிப்பிட்ட அரசியல் விளம்பரத்தை உலகின் எந்த நாட்டிலிருந்து கொடுத்திருக்கின்றனர் என்பதையும் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்படும்.

4. போலி கணக்குகளை தடுக்கும் வகையில் பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்த இரண்டு கட்ட அங்கீகார சோதனை மேற்கொள்ளவிருக்கிறது. ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பவர் எந்த தேசத்தில் எந்த பகுதியில் இருக்கிறார் என்பது உறுதிபடுத்தப்பட்ட பின்னரே கணக்குக்கான அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாக அரசியல் சார்ந்த ஃபேஸ்புக் விளம்பரங்கள், பக்கங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வதன் மூலம் விளம்பரம் தருபவர்களின் பொறுப்புணர்ச்சியை அதிகரிக்க முடியும் என நம்புவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்கள் தாங்கள் பார்க்கும் விளம்பரங்களை மதிப்பீடு செய்ய முடிவதோடு தேர்தலுக்காக ஃபேஸ்புக்கை எந்த ஒரு வகையிலும் தவறாக பயன்படுத்தவிடாமல் தடுக்க இயலும் என்று தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் பிப்ரவரி 21-ல் அமலுக்கு வருகின்றன.

கேம்ப்ரிட் அனலிடிக்கா சர்ச்சை எதிரொலியாகவே ஃபேஸ்புக் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கெனவெ  வாட்ஸ் அப் வாயிலாகப் பரவும் வதந்திகளைத் தடுக்க இந்தியா ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x