Last Updated : 19 Feb, 2019 07:58 AM

 

Published : 19 Feb 2019 07:58 AM
Last Updated : 19 Feb 2019 07:58 AM

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் வியன்னா உடன்படிக்கை மீறியது பாகிஸ்தான்; மரண தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதம்

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் நேற்று வாதிடப்பட்டது.

இந்திய கடற்படையின் முன் னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் (48). தங்கள் நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததால், ஜாதவை கைது செய்ததாக, 2016-ம் ஆண்டு பாகிஸ் தான் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர். ஆனால், ஈரானி லிருந்து அவரை பாகிஸ்தான் கடத்திச் சென்றதாக இந்தியா தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, ஜாதவ் மீதான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017 ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் (ஐசிஜே) இந்திய அரசு வழக்கு தொடுத்தது. இதையடுத்து, ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஐசிஜே இடைக்கால தடை விதித்தது..

இந்நிலையில், இந்த வழக்கு மீதான 4 நாள் விசாரணை நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக இந்தியா சார்பில் நேற்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதிடும்போது, “குல்பூஷண் ஜாதவ் மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மேலும் அவரை கைது செய்த பிறகு, தூதரக ரீதியாக அணுக பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக 13 முறை நினைவூட்டப்பட்ட போதிலும் பதில் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்தும் தீர்ப்பின் விவரம் குறித்தும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, தூதரக அணுகுதல் மீதான வியன்னா உடன்படிக்கையை மீறும் செயல் ஆகும்.

மேலும் ஜாதவை தீவிரவாதியாக சித்தரித்து, இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள பாகிஸ்தான் முயற்சிக்கிறது. இதற்காக சர்வதேச நீதிமன்றத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்துகிறது. எனவே, தூதரக ரீதியாக அணுக அனுமதிக்காமல் ஜாதவை சிறையில் அடைத்து வைத்திருக்கும் பாகிஸ்தான் செயல் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். மேலும் ஜாதவுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ரத்து செய்வதுடன் அவரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இன்று பாகிஸ்தான் தரப்பில் வாதிடப்படும். பாகிஸ்தான் வாதத்துக்கு இந்தியா தரப்பில் நாளை பதில் அளிக்கப்படும். 21-ம் தேதி பாகிஸ்தான் தனது இறுதி வாதத்தை முன்வைக்கும். இந்த வழக்கில் அடுத்த சில மாதங்களில் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x