Published : 19 Feb 2019 01:00 PM
Last Updated : 19 Feb 2019 01:00 PM

அவசர நிலை உத்தரவு: ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்த 16 மாகாணங்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவசர நிலையை அறிமுகப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் 16 மாகாணங்கள் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளன.

மெக்ஸிகோ எல்லையில்  சுவர் எழுப்பும் திட்டத்துக்கு அதிபர் ட்ரம்ப் கேட்கும் தொகைக்குக் குறைவான நிதி ஒதுக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர்  ஒப்புதல் அளிக்க, பொறுமை இழந்த அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே நிதி பெறுவதற்காக அவசர நிலையை அறிவித்தார்.

ஆளும் குடியரசுக் கட்சி, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சமீபத்தில் எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பேச்சு நடந்தது. எல்லைச் சுவருக்காக அதிபர் ட்ரம்ப் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) கோரினார். ஆனால், அதில், 137.5 கோடி டாலர் நிதி ஒதுக்கீடு செய்ய மட்டுமே ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் ஒப்புக் கொண்டனர்.

ட்ரம்ப் வலியுறுத்தி வந்தபடி கான்கிரீட் சுவர்களை எழுப்ப ஜனநாயகக் கட்சியினர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்யும் வகையில் அவசர நிலையை அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இதற்கு பல தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அமெரிக்காவின் 16 மாகாணங்கள் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன.

இதுகுறித்து கலிபோர்னியாவின் அரசு தலைமை வழக்கறிஞர் சேவியர் பிசேரா கூறும்போது, ''ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு எதிரானது. அதிபர் ட்ரம்ப் சட்ட விதிமுறைகளை அவமதிக்கிறார். ட்ரம்ப்புக்கு எல்லையில் எந்த நெருக்கடியும் இல்லை. இந்த அவசர நிலை அறிவிப்பு தேவையற்றது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x