Last Updated : 05 Feb, 2019 07:24 PM

 

Published : 05 Feb 2019 07:24 PM
Last Updated : 05 Feb 2019 07:24 PM

கைது செய்யப்பட்ட 130 அயல்நாட்டு மாணவர்கள் தெரிந்தேதான் குற்றம் செய்துள்ளனர்: அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்காவில் போலி பல்கலையில் சேர்வதற்காக முயற்சி செய்த 129 இந்திய மாணவர்கள் உட்பட, 130 அயல்நாட்டு மாணவர்கள் மோசடி செய்து அமெரிக்காவிலேயே தங்குவதற்காக வேண்டுமென்றேதான் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர் என்று அமெரிக்க அரசுத்துறை கண்டித்துள்ளது.

 

இந்த மாணவர்களை கடந்த வாரம் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி கைது செய்தது. இல்லாத ஃபார்மிங்டன் பல்கலைக் கழகத்தில் இவர்கள் என்ரோல் செய்துள்ளனர்.

 

இந்தப் போலிப் பல்கலையை ஏற்படுத்தியது அமெரிக்காவின் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி அமைப்புதான்.

 

இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அரசாங்கத்துறையின் செய்தித் தொடர்பாளர் அறிக்கை ஒன்றில் கூறும்போது, “ஃபார்மிங்டன் பல்கலைக் கழகங்களில் வகுப்புகள் இல்லை, (ஆன்லைனிலும் இல்லை நேரடியாகவும் இல்லை), என்பது தெரிந்தே, குற்றமிழைக்கிறோம் என்பதைத் தெரிந்தே இந்த மாணவர்கள் அப்ளை செய்துள்ளனர். காரணம் அமெரிக்காவிலேயே சட்ட விரோதமாகத் தங்குவதற்காக” என்று கூறியுள்ளது.

 

‘பே அண்ட் ஸ்டே’ என்ற இந்தப் போலித்திட்டத்தை நடத்தி மாணவர்களை இதற்குள் இழுத்து விட்ட கும்பலின் 8 பேரையும் அமெரிக்கா கைது செய்துள்ளது. இவர்கள் இந்தியர்களாகவோ இந்திய-அமெரிக்கர்களாகவோ இருக்கின்றனர்.

 

வகுப்புகள் இல்லை,  குறைவான டியூஷன் கட்டணம், ஆகியவற்றுடன் பணிஅனுமதியையும் வழங்கியதில் 600 மாணவர்கள் முதல்கட்டமாக விண்ணப்பித்துள்ளனர்.

 

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கூறப்படுவதைக் காட்டிலும் அதிகமே. விடுவிக்கப்பட்ட சில மாணவர்களும், அங்கிருந்து தப்பித்த மாணவர்கள் சிலரும் அமெரிக்காவை விட்டு வெளியேறினர். எண்ணிக்கை தெரியாத இந்திய மாணவர்களின் செயல்பாட்டை கைது மையத்தில் அமெரிக்கா நெருக்கமாக கண்காணித்து வருகிறது.

 

அரசு நடத்திய இந்த நாடகம் மீது கடும் விமர்சனம்:

 

பிரபல இந்திய-அமெரிக்கர்கள், மற்றும் ஊடகங்கள் அமெரிக்காவின் இந்தச் செயலை இழிவானது என்று கண்டித்துள்ளனர், “மாணவர்களை வேண்டுமென்றே சிக்க வைத்திருப்பது சட்ட விரோதமானது, குற்ற நடவடிக்கை மற்றும் அறமற்றது” என்று சாடியுள்ளனர்.

 

இந்திய மாணவர்களால் அமெரிக்காவுக்கு 6 பில்லியன் டாலர்கள் வருமானம் வருகிறது, அது மட்டுமல்லாமல் இவர்களால் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு அமெரிக்கா வந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பங்களிப்பு செய்கிறது.

 

இதில் பெரும்பாலும் சிக்கியவர்கள் தெலுங்கு மாணவர்கள். இவர்கள் தெரியாமல் இந்த வலையில் விழுந்துள்ளனர், இப்போது இவர்கள் கனவு தகர்ந்து போயுள்ளது என்று வட அமெரிக்க தெலுங்குச் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x