Last Updated : 17 Jan, 2019 10:39 AM

 

Published : 17 Jan 2019 10:39 AM
Last Updated : 17 Jan 2019 10:39 AM

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.

கடந்த 26 ஆண்டு காலத்தில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் வென்றது இதுதான் முதல்முறையாகும்.பிரதமர் தெரசா மே தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் மிகக்குறுகிய இடைவெளியில் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் தீர்மானம் மீது 2016-ல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்சிட் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை வரும் மார்ச் 29-க்குள் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தெரசா மே இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக பிரெக்சிட் ஒப்பந்தம் மீது இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 எம்.பி.க்களும் ஆதரவாக 202 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 230 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் மீதான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்  தலைவர் ஜெர்மி கோர்பின், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் கடுமையாக ஆளும் அரசை விமர்சித்தார். “உயிரற்ற பொறுப்பற்ற அரசு, இந்த நாட்டில் தோல்வி அடைந்துவிட்டது. பிரக்சிட் ஒப்பந்தத்தில் தோல்வி அடைந்த இந்த அரசு இனிமேலும் நீடிக்காமல் பதவி விலக வேண்டும் ” என்று  கோர்பின் காட்டமாகப் பேசினார். இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் ஏறக்குறைய 4 மணிநேரம் நடந்தது.

முடிவில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், எதிர்க்கட்சித் தலைவர் கோர்பினுக்கு ஆதரவாக 306 வாக்குகள் மட்டுமே கிடைத்து தோல்வி அடைந்தது. அதேசமயம், அவருக்கு எதிராகவும், அதாவது தெரசா மேவுக்கு ஆதரவாகவும் 325 வாக்குகளும் கிடைத்தன. இதனால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தெரசா மே வெற்றி பெற்றார்.

இந்த வெற்றிக்குப் பின் பிரதமர் தெரசா மே நிருபர்களிடம் கூறியதாவது:

 

“ நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அரசு வெற்றி பெற்றுள்ளது. பிரக்சிட் தீர்மானத்தை நோக்கி அனைவரும் தீர்வுகான நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரக்சிட் தீர்மானத்துக்கு மாற்றாக மற்றொரு தீர்வுடன் நான் திங்கள்கிழமை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருகிறேன்.

அப்போது, எதிர்க்கட்சிகளுடன் மீண்டும் பேச்சு நடத்துவேன். ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களும் பிரக்சிட் தீர்மானத்துக்கு சுமுகமான வழிமுறைகளை எதிர்பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் நாம் அனைவரும் சுய லாபத்தை ஒதுக்கிவைத்து செயல்பட வேண்டும். இப்போது நமக்கு என்ன தேவையில்லை என்பது அனைத்து எம்.பி.க்களுக்கும் தெரிந்துவிட்டது. ஆதலால், நாடாளுமன்றத்துக்கு என்ன தேவையோ அதை அனைவரும் ஒன்றாக இணைந்து கண்டிப்பாக செயலாற்ற வேண்டும். அதனால்தான் அனைத்துக் கட்சி எம்.பி.க்களையும் நான் தீர்வு காண அழைத்தேன் “

இவ்வாறு தெரசா மே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x