Published : 16 Jan 2019 11:43 AM
Last Updated : 16 Jan 2019 11:43 AM

பிரெக்ஸிட் ஒப்பந்தம்: நாடாளுமன்றத்தில் வரலாற்றுத் தோல்வியைச் சந்தித்த தெரசா மே அரசு

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தொடர்பாக பிரதமர் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தத்தை  எம்.பி.க்கள் தோற்கடித்தது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''இங்கிலாந்து பிரதமர் தெரசா மே செவ்வாய்க்கிழமை பிரெக்ஸிட் தொடர்பான ஒப்பந்தத்தை  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இதில் ஒப்பந்தத்துக்கு எதிராக 432 வாக்குகளும், ஆதரவாக 202 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதனால் தெரசா மே கொண்டு வந்த ஒப்பந்தம் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் ஆளும் கட்சி எம்.பி.க்களும் அடக்கம். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு ஆளும் கட்சி அடைந்த மோசமான தோல்வியாக இது கருதப்படுகிறது'' என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தோல்வி குறித்து தெரசா மே கூறும்போது, ''இந்த வாக்கெடுப்பின் முடிவு இந்த நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த நாடாளுமன்றம் இந்த முடிவை அரசு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறதா? என்பதை நாங்கள் உறுதி செய்யத் தேவை இருக்கிறது'' என்றார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் தெரசா மே அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்த ஒப்பந்தம் அடிப்படையில் பிரிட்டன் விலகும் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்ற முடிவுக்கு ஆதரவாக பிரிட்டனில் 2016-ல் ஏற்பட்ட ஒருமித்தமான முடிவை அமல்படுத்த முடியுமா என்ற சூழல் உருவானது.

தெரசாவின் கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனின் எதிர்கால உறவு எப்படி இருக்க வேண்டும் என்று வெவ்வேறு கருத்துகளும் எழுந்தன.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தெரசா மே ஒப்பந்தம் மீது விமர்சனம் இருந்த 48  எம்.பி.க்களால் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து தெரசா மே அரசு மீது கொண்டு வந்த  நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரசா மே கடந்த மாதம் வெற்றி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x