Last Updated : 12 Jan, 2019 10:46 AM

 

Published : 12 Jan 2019 10:46 AM
Last Updated : 12 Jan 2019 10:46 AM

இந்திய ரசிகர்களை பறவைக் கூண்டில் அடைத்துக் கொடுமைப்படுத்திய அரபு நாட்டவர் கைது

ஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர்களைப் பறவைகள் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்திய அரபு நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அபுதாபியில் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி நடந்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோற்கடித்தது.

இந்தப் போட்டிக்கு முன்பாக, அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிலரை ஒரு பறவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியானது. அதில், அந்த அரபு நாட்டவர்,  இன்று நடக்கும் கால்பந்துப் போட்டிக்கு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்கிறார். அதற்கு கூண்டுக்குள் இருக்கும் மக்கள், இந்திய அணிக்கு என்று தெரிவித்தவுடன் தன் கையில் இருக்கும் பிரம்பால் அடித்து, அரபு அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தச் செய்தியை 'கலீஜ் டைம்ஸ்' நாளேடும் வெளியிட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஆசிய நாட்டவர்கள் பலரை ஒரு அரபு நாட்டவர் பறவைக் கூண்டில் அடைத்து வைத்து கேள்வி கேட்டு அடிக்கும் வீடியோவைப் பார்த்தோம். கூண்டில் அடைக்கப்பட்ட அனைவரும், யுஏஇ கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தலைமை அலுவலகத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த அரபு நாட்டவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் அனைவரும் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்கள், என்று நகைச்சுவைக்காக இதுபோல் செய்ததாகவும் தெரிவித்தார். ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் விதிப்படி இது சகிப்பின்மை, மரியாதையை வெளிப்படுத்துவதாக இல்லை. ஒருபோதும் பாகுபாட்டையும், வேறுபடுத்துதலையும் அரசு பொறுக்காது. அனைவருக்கும் சமத்துவம், தகுதி ஆகியவற்றில் அரசு நம்பிக்கை வைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியர்கள் உள்ளிட்ட ஆசிய நாட்டவர்கள் பலரைக் கூண்டுக்குள் அடைத்து வைத்த அரபு நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், யுஏஇ சட்டப்படி, அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறையும், 20 லட்சம் திர்ஹாம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x