Published : 02 Jan 2019 10:51 AM
Last Updated : 02 Jan 2019 10:51 AM

புத்தாண்டு உரையில் அமெரிக்காவை எச்சரித்த கிம்

அமெரிக்கா எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் புதிய வழியை வடகொரியா தேர்ந்தெடுக்கும் என்று அந்நாட்டு அதிபர் கிம்  ஜோங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு புதிய வருடம் பிறந்ததுள்ளத்தையடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தனது நாட்டு மக்களுக்கு புத்தாண்டு உரையை செவ்வாய்க்கிழமை பேசினார். இதில் கிம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அமெரிக்காவுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்தார்.

இதில் கிம் பேசும்போது,  ”உலக நாடுகளின் முன்னிலையில் எங்கள் நாட்டுக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா ஒருவேளை செய்யத் தவறி எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், நாங்கள் உங்களுக்கு அளித்த உறுதி மொழிகளைக் கைவிட்டு எங்கள் இறையாண்மையைப் பாதுகாப்ப புதிய வழிகளைத் தேர்ந்தெடுப்போம்” என்று கூறினார்.

இந்த நிலையில் கிம்மின் உரை குறித்து தென் கொரிய முன்னாள் அமைச்சர் கிம் யங் சியோக் கூறும்போது ”அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் கிம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.எனினும் தொடர்ந்து அமெரிக்கா - வடகொரியா இடையே  அணு ஆயுத சோதனைகள் தொடர்பான மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x