Last Updated : 25 Jan, 2019 03:50 PM

 

Published : 25 Jan 2019 03:50 PM
Last Updated : 25 Jan 2019 03:50 PM

நம் தலைவர்களை பிறநாடுகள் தேர்ந்தெடுக்க அனுமதிப்போமா, அது போல்தான் பிறநாட்டு தலைவர்களை நாம் முடிவு செய்யக் கூடாது: அதிபர் ட்ரம்பை விளாசிய ஜனநாயகக் கட்சியின் துளசி கபார்ட்

வெனிசூலாவில் யார் அதிபராக வேண்டும் என்பதையெல்லாம் அமெரிக்கா தீர்மானிக்கக் கூடாது, வெனிசூலா மக்கள் தீர்மானிக்கட்டும் வெனிசூலா விவகாரத்திலிருந்து அமெரிக்கா முற்றிலும் ஒதுங்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான பட்டியலில் இருப்பவருமான துளசி கபார்ட் அதிபர் ட்ரம்ப் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

 

37 வயதாகும் துளசி கபார்ட், அமெரிக்க காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்துப் பெண்மணி ஆவார். 4 முறை ஜனநாயகக் கட்சியில் அமைச்சராக இருந்தவர், அமெரிக்காவின் அடுத்த அதிபர் போட்டியாளர்கள் பட்டியலில் துளசி கபார்ட் பெயரும் உள்ளது.

 

வெனிசூலாவின் மறைந்த முன்னாள் அதிபர் சாவேஸ் அமெரிக்காவுக்கு செக் வைத்ததிலிருந்தே வெனிசூலா மீது அமெரிக்க பகை வளர்ந்தது, சாவேஸை ஒரு 600 முறையாவது அமெரிக்கக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கும். இந்நிலையில் சாவேஸ் மறைவுக்குப் பிறகு சோஷலிஸ்ட் அரசின் அதிபராக நிகோலஸ் மதுரோ இருந்து வருகிறார், அவரை தூக்கி எறியவும், எதிர்க்கட்சித் தலைவர் யுவான் குவைடோ அதிபராக வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

 

இந்நிலையில் 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறியப்படும் துளசி கபார்ட், “வெனிசூலா விவகாரத்திலிருந்து அமெரிக்கா தள்ளி நிற்க வேண்டும். வெனிசூலா மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தேர்வு செய்யட்டும். நம் தலைவர்களை வெளிநாடு தேர்வு செய்தால் நாம் ஏற்போமா, அனுமதிப்போமா, அது போல்தான் நாமும் பிறநாட்டுத் தலைவர்களை இங்கிருந்தபடி தேர்ந்தெடுக்கக் கூடாது தீர்மானிக்கக் கூடாது” என்று ட்வீட் ஒன்றில் ட்ரம்பை விளாசியுள்ளார்.

 

அமெரிக்க அரசின் அயலுறவுக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருபவர் துள்சி கபார்ட். அமெரிக்கப் படைகளை பிறநாட்டில் கொண்டு நிறுத்துவதையும் இவர் விமர்சித்து வருகிறார்.

 

அதிபர் ட்ரம்ப் கடும் இடதுசாரி அதிபரான மதுரோவை  ‘சட்டவிரோத அதிபர்’ என்றும் குவைடோதான் அதிபர் என்றும் கூறிவருகிறார்.

 

இன்னொரு இந்திய-அமெரிக்க உறுப்பினரான ரோ கன்னா என்பவரும் ட்ரம்பின் கொள்கையை விளாசிய போது, “வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பதவி அபிஷேகதை ட்ரம்ப்  செய்யக் கூடாது. மதுரோ அரசு சரியில்லைதான் ஆனால் அதற்காக அங்கு நம் முடிவை நாம் திணிக்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x