Published : 18 Dec 2018 12:12 PM
Last Updated : 18 Dec 2018 12:12 PM

ஜமால் கொலை: சவுதி - அமெரிக்கா உறவில் விரிசல்?

ஜமால் கொலை விவகாரம் தொடர்பாக அமெரிக்க  நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட கண்டன தீர்மானத்தை சவுதி அரேபியா விமர்சித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் துருக்கியில் சவுதி தூதரக அலுவலகத்தில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமாலின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் ஜமாலின் கொலைக்குக் காரணமான சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராகவும் ஜனநாயக கட்சி மற்றும்  குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் கண்டனத் தீர்மானத்தை சவுதி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து சவுதி வெளியிட்ட அறிக்கையில்,  ”ஜமால் கொலை வழக்கில் சவுதிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சவுதி முன்னரே கூறி இருந்தது. அமெரிக்காவின் உள்நாட்டு அரசியல் விவாதங்களில் ஜமாலின் கொலை இழுக்கப்படவில்லை என்று கருதுகிறோம். இதன் காரணமாக அமெரிக்கா - சவுதி இடையே பாதிப்பு ஏதும் இருக்காது என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

சவுதி அரசையும் அதன் இளவரசர் முகமது பின் சல்மானையும் கடுமையாக  விமர்சித்தவர் பத்திரிகையாளர் ஜமால். இவர் கடந்த அக்.2-ம் தேதி துருக்கி பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக ஆவணங்களைப் பெறச் சென்றவர் இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்டார்.

இவருக்கும் சவுதியைச் சேர்ந்த 15 பேருக்கும் ஏற்பட்ட மோதலில் ஜமால் இறந்ததாக சவுதி கூறிவந்தது. இது வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை, என்றும் இக்கொலையில் இளவசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாகவும்  கூறி ஆதாரங்களை வெளியிட்டதுடன் குற்றவாளிகளைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு துருக்கி குற்றம் சாட்டியது.

ஆனால் சவுதி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது. இந்தக் கொலை வழக்கில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று சவுதி கூறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x