Published : 13 Aug 2014 10:00 AM
Last Updated : 13 Aug 2014 10:00 AM

இராக் புதிய பிரதமர் ஹைதர் அல்-இபாதி ஆட்சி அமைக்க ஒரு மாதம் கெடு: கிளர்ச்சிப் படைகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்

இராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல்- இபாதி அறிவிக்கப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைக்க அவருக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளின் முகாம்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் செவ்வாய்க்கிழமையும் தொடர் தாக்குதல்களை நடத்தின.

இராக்கில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் மற்றும் குர்து இன மக்கள் வாழ்கிறார்கள். சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்க ஆதரவுடன் ஷியா பிரிவு தலைவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் ஷியா முஸ்லிம் கட்சிகளின் கூட்டணியான இராக் தேசிய கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. தற்போதைய பிரதமர் நூரி அல் மாலிக் 3-வது முறையாக பிரதமராக முயற்சி மேற்கொண்டார். கிளர்ச்சிப் படைகளை கட்டுப்படுத்த தவறியது, அனைத்து பிரிவினரையும் அரவணைத்துச் செல்லாதது என அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதால் அவருக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

தற்போது குர்து இனத்தைச் சேர்ந்த புவத் மாஸு இராக் அதிபராக உள்ளார். நூரி அல் மாலிக்கை புதிய பிரதமராக அறிவிக்க அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. மாலிக்கின் ஆலோசகராக இருந்த ஹைதர் அல்-இபாதியை புதிய பிரதமராக அதிபர் புவத் மாஸு திங்கள்கிழமை இரவு அறிவித்தார். புதிய ஆட்சி அமைக்க அவருக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஹைதர் அல்-இபாதிக்கும் அதிபர் புவத் மாஸுக்கும் ஆதரவாக அமெரிக்கா செயல்படுகிறது. புதிய ஆட்சி அமைவதில் இடையூறு செய்ய வேண்டாம் என்று மாலிக்கிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கண்டிப்புடன் கேட்டுக் கொண்டுள்ளார். இராக்கில் குர்து இன மக்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைநகரம் எர்பில். இங்கு 15 லட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்த நகரில் யாஸிதி என்ற பழங்குடியின மக்களும் வசிக்கிறார்கள்.

சதாம் உசேன் ஆட்சிக்கு எதிரான இராக் போரின்போது இந்த நகர மக்கள் அமெரிக்காவுக்கு உதவியாக இருந்துள்ளனர். இங்கு அமெரிக்க தூதரகமும் உள்ளது. தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினர் எர்பில் நகரை குறிவைத்து அடுக்கடுக்காக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் யாஸிதி இன மக்களும் குர்து இனமக்களும் அண்டை நாடான சிரியாவுக்கு தப்பி ஓடுகின்றனர். மேலும் எர்பில் நகர் அருகில் உள்ள மலைப் பகுதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு அமெரிக்க ராணுவ சரக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களும் குடிநீர் பாட்டீல்களும் வீசப்பட்டு வருகின்றன.

அமெரிக்க விமானங்கள் தாக்குதல்

குர்து, யாஸிதி இன மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அமெரிக்கா தற்போது வான் வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை இராக் ராணுவத்துக்கு மட்டுமே அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை அளித்து வந்தது. தற்போது குர்து படையினருக்கு அமெரிக்கா நேரடியாக ஆயுதங்களை வழங்கி வருகிறது.

எர்பில் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகள் நெருங்கவிடாதபடி அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன. இதனால் கிளர்ச்சிப் படை பின்வாங்கியுள்ளது. அமெரிக்க போர் விமானங்களின் தாக்குதலில் சின்ஜார் பகுதியில் கிளர்ச்சிப் படைகளின் 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x