Last Updated : 07 Nov, 2018 09:53 AM

 

Published : 07 Nov 2018 09:53 AM
Last Updated : 07 Nov 2018 09:53 AM

பாகிஸ்தானில் 8,000 வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் ஹேக்: ஏராளமான தொகை களவு போனதால் மக்கள் அதிர்ச்சி

கடந்த அக்டோபர் மாதத்தில் பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு ஏராளமான பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய அரசு அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

பெடரல் விசாரணை முகமையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட புகார்கள் வந்ததையடுத்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அக்டோபர் 27, 28 தேதிகளில் சுமார் 12 வங்கிகளைச் சேர்ந்த 8,000 வாடிக்கையாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்தனர்.

பேங்க் இஸ்லாமியிலிருந்து ரூ.2.6 மில்லியன் தொகை திருடப்பட்டுள்ளது. சர்வதேச பேமெண்ட் கார்டுகள் மூலம் இந்தத் திருட்டு நடந்துள்ளது. இதனையடுத்து பேங்க் இஸ்லாமி தனது ஆன்லைன் வர்த்தக நடவடிக்கை, கார்டு சிஸ்டம் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் களவாடப்பட்ட 2.6 மில்லியன் ரூபாய்களை வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கியே செலுத்தி விட்டது என்று பேங்க் இஸ்லாமி தெரிவித்தது.

கான் ஆய்வுமையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி தன் கணக்கிலிருந்து ரூ.30 லட்சம் திருடப்பட்டுள்ளதாக பகீர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

எஃப்.ஐ.ஏ. சைபர் கிரைம் அதிகாரி மொகமத் ஷோயப் கூறும்போது, “பெரும்பாலான பாகிஸ்தானிய வங்கிகளிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளது” என்றார்.

மொத்தமாக எத்தனை பேர் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் களவு போயுள்ளது என்பது தீர்மானமாகத் தெரியவில்லை, வங்கிகள் இதனை மறைக்கவே முயற்சி செய்யும் ஏனெனில் இது வங்கிகளின் மீதான நம்பகத்தன்மையை கெடுத்து விடும் என்று வங்கி ஊழியர்கள் சிலர் கூறினர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் அளிப்பதில்லை, காரணம் வங்கிகள் அவர்கள் இழந்த தொகையை கொடுத்து விடுகிறது. ஆகவே எவ்வளவு பேர் பணத்தை இவ்வாறு பறிகொடுத்தனர் என்பதைச் சரியாக கணக்கிட முடியவில்லை என்கிறார் இன்னொரு அதிகாரி.

வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டாலும் வங்கி இணையதளம் ஹேக் செய்யப்படவில்லை என்று பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகள் தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக வரும் செய்திகளைப் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி மறுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x