Last Updated : 10 Oct, 2018 01:59 PM

 

Published : 10 Oct 2018 01:59 PM
Last Updated : 10 Oct 2018 01:59 PM

‘ஒபாமா அரசைப் போன்று நான் கையாலாகாதவன் இல்லை’: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

கடந்த கால ஒபாமா அரசைப் போன்று நான் கையாலாகாதவனாக இருக்கமாட்டேன், தகுந்த பதிலடி கொடுப்பேன் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு சீனக் கடலில் செயற்கையாகத் தீவு அமைக்க சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், அந்த தெற்கு சீனக் கடலுக்கு ஜப்பான், வியட்நாம், மலேசியா, புருனே, தைவான் ஆகிய நாடுகளும் தங்களின் உரிமையை நிலைநாட்ட விரும்புகின்றன. ஆனால், சீனா அதற்குத் தடையாக இருந்து மற்ற நாடுகளைத் தனது படை பலத்தால் அச்சுறுத்தி வருகிறது.

தெற்கு சீனக்கடல் இயற்கை வளங்கள் நிறைந்தது. எண்ணெய் வளம், தாதுப்பொருட்கள் நிறைந்த கடற்கரை என்பதால் அங்கு அனைத்து நாடுகளும் தங்களின் உரிமையை நிலைநாட்ட விரும்புகின்றன. ஆனால், தெற்கு சீனக்கடல் பரப்பு முழுவதையும் சீனா தனது பிடிக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதனால், ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தியும், அப்பகுதியில் ரோந்து வரும் செயலையும் கடந்த காலங்களில் செய்தது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில், தெற்கு சீனக்கடல் பிரச்சினை இருந்தபோதிலும்கூட, அதில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை நிறுத்தி சீனாவுக்கு மிரட்டல் விடுத்து வந்தது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவுக்கு கடந்த வாரம் சுற்றுப்பயணம் முடித்து அமெரிக்காவுக்கு வந்தார். அவருடன் அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் வெள்ளைமாளிகையில் நிருபர்களுக்கு அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் இதற்கு முன் அமெரிக்காவில் இருந்த ஒபாமா அரசு கையாளாகாத தனத்துடன் செயல்பட்டது. அதனால்தான் தெற்கு சீனக் கடல்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அதுபோன்று என்னுடைய அரசு இருக்காது. பிரச்சினைக்குரிய கடற்பகுதியில் சீனாவின் ராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது. இதில் நாங்கள் பொறுமை காக்க மாட்டோம், நாங்கள் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.

வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ சீனாவுக்குச் சென்று வந்துள்ளார். அவரிடமிருந்து சீனா எனக்குப் பல செய்திகளை அனுப்பியிருந்தாலும், அதனால், எந்தப் பயனும் இல்லை. பெய்ஜிங் சென்ற பாம்பியோவுக்கு நல்ல மரியாதை கொடுக்கப்பட்டது மகிழ்ச்சிதான். ஆனால், அங்கு சீன அதிகாரிகளுடன், பாம்பியோ நடத்திய பேச்சு எந்தவிதத்திலும் முன்னேற்றம் அளிக்கவில்லை. இதனால் சீனாவுக்கு எங்களுடைய பயணம் சிறப்பானதாக இருந்தது எனச் சொல்ல முடியாது''.

இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தெற்கு சீனக் கடல் பிரச்சினையில் சீனாவும், அமெரிக்காவும் மீண்டும் மோதல் போக்கைத் தொடங்கியுள்ளன. இதனால், தெற்கு சீனக் கடல்பகுதியில் விரைவில் அமெரிக்கா தனது கடற்படையைக் குவிக்கலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x