Published : 29 Oct 2018 08:42 AM
Last Updated : 29 Oct 2018 08:42 AM

இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்தது: 200 பயணிகள் பலி?

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட தனியார் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா நகரில் இருந்து பங்கல் பினாங் நகருக்கு லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான் ஜேடி610 என்ற விமானம் சென்றது. இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ்8 வகையைச் சேர்ந்தது. விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 200 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

விமானம் ஜகார்த்தாவில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்ட விமானம் வானில் பறந்த 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. விமானப் பயணத்தின்படி காலை 7.20 மணிக்கு பினாங் நகரை அந்த விமானம் அடைந்திருக்க வேண்டும். ஆனால், விமானம் அந்த நகருக்குச் சென்று சேரவில்லை. இதனால், கடல் பகுதியில் விமானம் விழுந்திருக்கக் கூடும் என்று இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், விமானம் கடலில் விழுந்து மூழ்கியது என்பதையும் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் யூசுப் லத்தீப் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளார்.

லயன் விமான நிறுவனத்தின் சிஇஓ எட்வர்ட் சிரெய்த் கூறுகையில், ''இப்போதுள்ள நிலையில் எந்த விவரங்களையும் அளிக்க முடியாது, நாங்கள் பல்வேறு தகவல்களைத் திரட்டி வருகிறோம்'' எனத் தெரிவித்தார்.

விமானம் கடலில் விழுந்ததையடுத்து பயணிகளைக் காப்பாற்றும் வகையில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது இந்தோனேசிய அரசு. ஜகார்த்தாவின் வடகடல்பகுதியில் உள்ள தன்ஜுங் பிரியோக் எனும் பகுதியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மிதப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப்படையினர், இந்தோனேசிய கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். மேலும், விமானம் விழுந்த பகுதியில் இருக்கும் கப்பல்களை மீட்புப்பணிக்கு பயன்படுத்தவும் இந்தோனேசிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் இந்தோனேசியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியான சோகம் நிகழ்ந்தது. இப்போது, அந்த சோகம் மறைவதற்குள் அடுத்த துயர சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x