Last Updated : 02 Oct, 2018 12:26 PM

 

Published : 02 Oct 2018 12:26 PM
Last Updated : 02 Oct 2018 12:26 PM

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: சும்பா தீவில் அச்சத்துடன் மக்கள் தவிப்பு

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று காலையில், சும்பா தீவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது என்று அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரிக்டரில் 7.0 அளவாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்த்து ஏற்பட்ட சுனாமி அலைகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனால், சுலாவேசி தீவின் தலைநகர் பலு நகரமே சோகமயமாகக் காட்சி அளிக்கிறது. பூகம்பத்தில் இடிந்த கட்டிடங்கள், வர்த்தக நிறுவனங்களைத் தோண்டும்போதெல்லாம் பிணக்குவியல்கள் காணப்படுகின்றன.

ஏறக்குறைய 900க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை ஒரே இடத்தில்அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு இந்த ஏற்பாடுகளை பலு நகர நிர்வாகம் செய்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்பட்டு சாலை ஓரத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள தீவான சும்பா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.9 ரிக்டர் அளவாகவும், அதைத் தொடர்ந்து 2-வதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவாகவும் இருந்தது.

சும்பா தீவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில், 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் துறை தெரிவித்துள்ளது. இந்த தீவில் 7.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சுலாவேசி தீவில் இருந்து 1,600 கி.மீ. தொலைவில் சும்பா தீவு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பூகம்பத்தில் என்னவிதமான சேதங்கள் ஏற்பட்டுள்ள என்பது குறித்த உடனடியான தகவல் இல்லை.

இது குறித்து சும்பா தீவில் உள்ள பிரபல படாதிட்டா பீச் ஹோட்டல் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று காலையில் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதே மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி சாலையில் நின்றனர். ஹோட்டலில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். சுனாமி ஏற்படலாம் என்ற அச்சத்தில் கடல்பகுதிக்குக் கூட யாரும் செல்லவில்லை. ஆனால், சுனாமி குறித்த எச்சரிக்கை ஏதும் இதுவரை விடப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x