Published : 30 Oct 2018 09:25 PM
Last Updated : 30 Oct 2018 09:25 PM

உயிரைக் காப்பாற்றிய போக்குவரத்து நெரிசல்: இந்தோனேசிய விமானத்தில் செல்லாமல் உயிர்தப்பிய பயணி கண்ணீர்விட்டு கதறல்

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்து, போக்குவரத்து நெரிசலால் விமானத்தைத் தவறவிட்டு பயணி உயிர்பிழைத்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலில் மட்டும் சிக்காமல் இருந்தால், அந்தப் பயணி விமானத்தில் பயணித்து உயிரிழந்திருக்கக் கூடும்

ஜாவா நகரின் மேற்கு பகுதியில் உள்ள பான்டங் நகரைச் சேர்ந்தவர் சோனி சேதியாவன். இவர் இந்தோனேசியா நிதி அமைச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திங்கள்கிழமை ஜகார்த்தாவில் இருந்து பினாங் நகரம் சென்ற லயன் விமானத்தில் செல்ல சோனி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். இவருடன் சேர்ந்து பணியாற்றும் 20 பணியாளர்களும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து பினாங் நகருக்குச் செல்ல விமான நிலையத்துக்குச் சோனி வந்தார். ஆனால், வரும்வழியில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டார். இவரைத் தேடி இவரின் நண்பர்களும், சக ஊழியர்களும் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், தான் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

நீண்டநேரத்துக்குப் பின் காலை 6.20 மணிக்கு ஜகார்த்தா விமான நிலையத்துக்குச் சோனி வந்துள்ளார். ஆனால், விமானம் புறப்பட்டு 10 நிமிடங்கள் ஆகிவிட்டதாக விமான நிலையத்தில் அதிகாரிகள் கூறியதால், விமானத்தைத் தவறவிட்டு வருத்தப்பட்டுள்ளார். மேலும், பினாங் நகருக்குச் செல்லும் அடுத்த விமானத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால், விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களிலேயே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் செய்தியை விமான நிலைய அதிகாரிகள் 7 மணிக்கு மேல் சோனியிடம் கூறியதும் அவர் அதிர்ச்சி அடைந்து கண்ணீர்விட்டு அழுதார். இந்த விமானத்தில் தான் பயணித்து இருந்தால், உயிருடன் இருந்திருக்க முடியாது என்று ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம், தன்னுடன் பணியாற்றும் 20 ஊழியர்களும் இதில் உயிரிழந்துவிட்டார்களே என்ற கவலையும் சோனிக்குக் கண்ணீரை வரவழைத்தது.

கடலில் விழுந்த ஜேடி160 விமானத்தில்தான் சோனி பயணித்திருப்பார் என்று எண்ணிய அவரின் மனைவி, தாயார் மற்றும் குடும்பத்தினர் தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், தான் உயிருடன் இருப்பதாக அவர்களுக்குத் தகவல் தெரிவித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் சோனி.

தனக்கு 2-வது வாழ்க்கை கிடைத்திருப்பது குறித்து சோனி சேதியாவன் கூறியதாவது:

நான் வழக்கமாக பினாங் நகருக்குக் காலை 6.20 விமானத்தில்தான் செல்வேன். அதற்காக 3 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு ஒரு மணிநேரத்தில் விமான நிலையம் வந்துவிடுவேன் ஆனால், அன்று 3 மணிக்குப்புறப்பட்டதில் இருந்து கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. என்னால் உரிய நேரத்துக்கு விமான நிலையத்துக்குச் செல்ல முடியவில்லை. விமானத்தையும் தவறவிட்டு காலை 6.20 மணிக்குத்தான் விமானநிலையம் வந்துசேர்ந்தேன்.

அடுத்த விமானத்தில் செல்லலாம் என்று முன்பதிவு செய்த சிறிதுநேரத்தில் லயன் விமானம் கடலில் விழுந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். வழக்கமாகப் போக்குவரத்துநெரிசல் இல்லாமல் இருக்கும் திடீரென இப்படி போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணம் என்ன என்று எனக்கு அப்போதுபுரியவில்லை.

நான் உயிர்பிழைத்தது ஒருபுறம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபுறம் என்னுடன் பணிபுரியும் 6 ஊழியர்கள் உள்ளிட்ட நிதித்துறையில் பணியாற்றும் 20 பேரும் விமானத்தில் பலியானது கேட்டு என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நான் இறந்துவிட்டேன் என நினைத்து தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து என் மனைவி, தாய், குழந்தைகள் அழுதுகொண்டிருந்தனர். அவர்களுக்கு நான் உயிருடன் இருக்கும் செய்தியை செல்போன் மூலம் தகவல் தெரிவித்தபோது அவர்களால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்னைப் போக்குவரத்து நெரிசல் உருவத்தில் வந்து கடவுள் காப்பாற்றியுள்ளார் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x