Published : 30 Aug 2018 12:38 PM
Last Updated : 30 Aug 2018 12:38 PM

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த 7-ம் தேதி காலமானார்.

கருணாநிதியின் மறைவுக்கு  இலங்கை உட்பட பல நாடுகளும்  அஞ்சலி செலுத்தின.இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில்  கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இந்தத் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி கே டெவிஸ் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கொண்டு வந்திருக்கிறார்.

அதில்,   "அமெரிக்க வாழ் தமிழர்கள் பலர் இந்த சிறந்த நபரைப் பற்றி எனது கவனத்துக்குக் கொண்டு வந்தனர் .

ஜூன் 3 1924 ஆம் ஆண்டு பிறந்த கருணாநிதி  ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு காலமானார். சமூக வாழ்வுக்காக 14 வயதிலிருந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். தனது 14 வயதில் தொடங்கிய முரசொலி என்ற பத்திரிகையில் எழுதத் தொடங்கி  92 வயதுவரை எழுதிக் கொண்டிருந்தார்.

தமிழ் மொழியில்  கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர்  நாவலாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகராக  விளங்கினார். அவர் எழுதிய புத்தகங்கள் பல லட்சக்கணக்கில் விற்றுத் தீர்த்துள்ளன.

கடந்த 70 ஆண்டுகளில் அரசியலில் தோல்வியைக் கண்டிராத தலைவராக இருந்திருக்கிறார். தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பணிசெய்திருக்கிறார்.சாதி ஒழிப்புக்கு தொடர்ந்து  குரல் கொடுத்தவர் கருணாநிதி” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியை திமுகவின் ட்விட்டர் பக்கம் வெளியிட்டு அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x