Last Updated : 26 Jul, 2018 08:14 PM

 

Published : 26 Jul 2018 08:14 PM
Last Updated : 26 Jul 2018 08:14 PM

இம்ரான் கானுக்கு பதிலாக வாசிம் அக்ரம் படம் வைத்து ஒளிபரப்பு: மன்னிப்பு கேட்ட புகழ்பெற்ற சேனல்

பாகிஸ்தான் நடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது கிரிக்கெட் வீரர்கள் இம்ரான் கானா அல்லது வாசிம் அக்கரமா என்பது தெரியாமல் குழப்பத்தில் வாசிம் அக்ரமின் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டதற்காகப் புகழ்பெற்ற பிபிசி சேனல் மன்னிப்பு கோரியது.

பிபிசி ஆங்கில சேனலில் நியூஸ்நைட் என்ற நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பானது. அதில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அப்போது பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கானின் புகைப்படத்தையும், கிரிக்கெட் விளையாடும் காட்சியையும் ஒளிபரப்புவதற்குப் பதிலாக, மற்றொரு புகழ்பெற்ற பெற்ற கிரிக்கெட் வீர்ர வாசிம் அக்ரமின் புகைப்படத்தையும் அவர் பந்துவீசும் காட்சியையும் ஒளிபரப்பியது. இதனால், இதைப் பார்த்த பார்வையாளர்களும், மக்களும் குழப்பமடைந்து, ட்விட்டர், பேஸ்புக்கில் பிபிசி நிறுவனத்துக்குப் புகார்கள் அனுப்பினர்.

அதன்பின் நிகழ்ச்சியின் இறுதியில் தொகுத்து வழங்கிய இவான் டேவிஸ், நிகழ்ச்சியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியில் தொடக்கத்தில் நாங்கள் தவறு செய்துவிட்டோம். இம்ரான் கானின் புகைப்படத்தை ஒளிபரப்புவதற்குப் பதிலாக, வாசிம் அக்ரமின் புகைப்படத்தை ஒளிபரப்பிவிட்டோம். இந்தத் தவறு எப்படி நடந்தது எனத் தெரியவில்லை. தவறுகளுக்கு வருந்துகிறோம்.

இந்தத் தவறு எப்படி நடந்தது எனத் கண்டுபிடித்து, மறுபடி இதே தவறு நடக்காமல் நாங்கள் தடுப்போம். நியூஸ்நைட் நிகழ்ச்சியில் இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் கவனமாக இருப்போம் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே பல பார்வையாளர்கள் டிவிட்டரில், உங்கள் நிகழ்ச்சி தொகுப்பாளரை கூகுள் செய்து பார்க்கச் சொல்லுங்கள் வாசிம் அக்ரம் புகைப்படம் வருகிறது என்று நினைவூட்டினார்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் இதேபோன்ற தவறை பிபிசி சேனல் செய்தது. இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு பதிலாகப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைக் கூறி ஒளிபரப்பியது.

லண்டனில் காமென்வெல்த் தலைவர்கள் நாடுகளின் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறீசேனா வந்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராணி எலிசபெத்தை சந்திக்க வருகிறார் என்று வர்ணனையாளர்கள் கூறினார்கள். பின்னர் தவற்றைத் திருத்திக்கொண்டு மன்னிப்பு கோரினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி கடந்த 2014-ம்ஆண்டு கடைசியாக லண்டன் அரண்மனைக்குச் சென்றார் அதன்பின் செல்லவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x