Published : 07 Jul 2018 08:44 AM
Last Updated : 07 Jul 2018 08:44 AM

சுரங்க ரயில் நிலையத்தில் விஷவாயு தாக்குதல் நடத்திய 7 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஜப்பான் அரசு நடவடிக்கை

ஜப்பான் தலைநகர் டோக்கியோ சுரங்க ரயில் நிலையத்தில் விஷவாயு தாக்குதல் நடத்திய சாமியார் ஷோகோ அசஹரா உட்பட 7 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஜப்பானின் குமமோட்டோ பகுதியைச் சேர்ந்தவர் சிஜியோ மாட்சூமோட்டா. இவர் பிறக்கும்போதே பார்வைக் குறைபாட்டுடன் பிறந்தார்.

பார்வையற்றோர் பள்ளியில் படித்த சிஜியோ, அக்குபஞ்சர் நிபுணரானார். கடந்த 1978-ல் டோமோகாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் பிறந்தனர். கடந்த 1982-ல் சட்டவிரோதமாக மருந்துகள் விற்றதாக கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் இருந்து விடுதலையான அவர் இந்தியா வந்ததாகக் கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு யோகா பயிற்சியாளராக மாறினார்.

கடந்த 1984-ம் ஆண்டு ‘ஓம் ஷினிக்யோ’ என்ற ஆன்மிக அமைப்பை தொடங்கினார். தனது பெயரை ஷோகோ அசஹரா என்று மாற்றிக் கொண்டார். ஆயிரக்கணக்கானோர் அவரது சீடர்களாகினர். தலைநகர் டோக்கியா உட்பட பல்வேறு நகரங்களில் அவரது ஆசிரமங்கள் திறக்கப்பட்டன. கடந்த 1990 நாடாளுமன்றத் தேர்தலில் சாமியாரின் சீடர்கள் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர். அதன்பிறகு அவர் வன்முறை பாதைக்கு திரும்பினார்.

கடந்த 1994 ஜூனில் சாமியாரின் உத்தரவின்பேரில் அவரது ஆதரவாளர்கள் மாட்சுமோட்டா நகரில் விஷவாயு தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். அப்போது சாமியார் மீது சந்தேகம் எழவில்லை.

அதன்பின் 1995 மார்ச் 20-ம் தேதி டோக்கியோ சுரங்க ரயில் நிலையத்தில் சாமியாரின் சீடர்கள் விஷவாயு தாக்குதலை நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 6,500-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சாமியார் ஷோகா அசஹரா உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2004-ம் ஆண்டில் சாமியார் உட்பட 7 பேருக்கு டோக்கியோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில் 7 பேருக்கும் நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சாமியாரின் சீடர்கள் மேலும் 6 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x