Published : 19 Aug 2014 06:19 PM
Last Updated : 19 Aug 2014 06:19 PM

உலகில் மாற்றத்தை உருவாக்குவது இளைஞர்கள் கையில் உள்ளது: மலாலா யூசுப்சாய்

உலகில் மாற்றத்தை உருவாக்குவது இளைஞர்கள் கையில் உள்ளது என்று பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஐ.நா. கொண்டுவந்த மில்லின்னியம் வளர்ச்சி திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 500 நாட்கள் செயற்பாட்டைத் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய மலாலா, பாகிஸ்தானில் தான் பிறந்த ஸ்வாட் பள்ளதாக்கில் பெண் கல்வியை ஆதரித்துத் தான் எழுப்பிய குரல் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், அவர் தெரிவிக்கையில், “நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் துயரத்தை எதிர்கொண்டு, அந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தந்து, அதற்காகக் குரல் கொடுங்கள்.

வளர்ந்து வரும் நாட்டில் வாழ்கிறோமா அல்லது வளர்ந்த நாட்டில் வாழ்கிறோமா, நாம் அனைவரும் சமம் என்று இளம் சமுதாயத்தினர் நம்ப வேண்டும். நாம் அனைவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நம் அனைவருக்கும் திறமை இருக்கின்றது. அதனால், கடுமையான உழைப்பை மட்டும் தொடருங்கள், நல்ல மாற்றத்திற்காகப் பிரச்சாரம் செய்யுங்கள். இந்த உலகத்தின் எதிர்காலம் நீங்கள்தான்; இந்த உலகித்தின் நாளைய தலைவர்கள் நீங்கள்தான்”, என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தலைமை தாங்கிய ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூன் பேசுகையில், “ஒரு துளி நீரை சேமிப்பதாகட்டும், தேவையில்லாமல் எரிந்துக்கொண்டிருக்கும் விளக்கை அணைப்பதாகட்டும்…இத்தகைய சிறு செயல்கள்கூட மாற்றத்தை உருவாக்க உதவும்.

அதே வேளையில், இந்த உலகத்தின் குடிமகனாக ஒவ்வொருவரும் பொறுப்பாக நடந்துக்கொள்ள வேண்டும்”, என்று தெரிவித்தார்.

மேலும், 1.2 பில்லியன் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கப் பெறவில்லை என்றும், 1.4 பில்லியன் மக்களுக்கு மின்சார வசதி கிடைக்கப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து உலகளவில் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

கடந்த 2000-ஆம் ஆண்டு உலகத் தலைவர்கள், வரும் 2015-ஆம் ஆண்டிற்குள் உலகில் உள்ள வறுமையைப் பாதியாகக் குறைப்போம் என்றும், எய்ட்ஸ் நோயைப் ஒழிப்போம் என்றும், சுத்தமான குடிநீர், சுகாதார வசதி ஆகியவை அதிகமான மக்களுக்குக் கிடைக்கப் பெறச்செய்வோம் என்று உறுதிப்பூண்டனர்.

ஆனால், பெண்களுக்குச் சமஉரிமை அளிப்பது, தாய்-சேய் மரணங்களைத் தடுப்பது, உலகில் உள்ள அனைவருக்கும் கல்வி கிடைக்கப்பெற செய்வது, துப்புரவு, சுகாதார வசதியை மேம்படுத்துவது ஆகியவை இன்று நாம் சந்தித்துச் சவால்களாக உள்ளன. இது தொடர்பாக, 2030-ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றவேண்டிய புதிய லட்சியங்கள் குறித்து ஐ.நா திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x