Published : 09 Jun 2018 03:48 PM
Last Updated : 09 Jun 2018 03:48 PM

புகழ் பெற்ற சமையல் கலைஞர் அந்தோணி 61 வயதில் தற்கொலை: ட்ரம்ப் இரங்கல்

 

அமெரிக்காவின் புகழ் பெற்ற சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் 61 வயதில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அதிபர் ட்ரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் (வயது 61). உலகம் முழுவதும் சென்று விதவிதமான உணவு வகைகளை சமைத்து பெயர் பெற்றவர். அந்தோணி தயாரித்துள்ள உணவு வகைகள், பானங்கள் பெரும் பிரசித்த பெற்றவை. சமையல் கலைக்காக அவர் ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.

அமெரிக்க டிவி சேனல்களில் பல சமையல் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். சிஎன்என் தொலைக்காட்சியில் ‘பார்ட்ஸ் அன்நோன்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், சமையல் நிகழ்ச்சி படபிடிப்புக்காக, பிரான்ஸ் சென்றார். பாரிஸ் அருகில் உள்ள தங்கு விடுதியில் தங்கி படபிடிப்புகள் நடந்து வந்தன. சொகுசு அறையில் தங்கியிருந்த அந்தோணி போர்டைன் விடிந்து நெடுநேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் நண்பர்கள் அறை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டு இருந்தார். பின்னர் அவர் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என சிஎன்என் தெரிவித்துள்ளது.

அந்தோணி போர்டைன் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலையும் டிரம்ப் கூறியுள்ளார். இதுபோலவே அந்தோணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் அதிபர் ஒபாமா அவருடன் அமர்ந்து உணவு அருந்தியதை நினைவு கூர்ந்துள்ளார்.

இதுபோலவே பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேட் ஸ்பேட் 55 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார். கேட் ஸ்பேடுக்கு உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடை விற்பனை கடைகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x