Published : 07 Jun 2018 08:13 AM
Last Updated : 07 Jun 2018 08:13 AM

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உலக நாடுகள் ஒன்றுசேர வேண்டும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் பொறுப்பை உணர்ந்து ஓரணியில் திரள வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அதன் உறுப்பு நாடுகளின் சிறப்புக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு இந்தியாவுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதி சையது அக்பருதீன் பேசிய தாவது:

அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக, இன்றைக்கு மனித சமூகம் பல மடங்கு மேம்பட்டுள்ளது. அதேசமயத்தில், இந்த வளர்ச்சியானது நமது சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்கையும் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமது சுய தேவைகளுக்காக இயற்கை வளங்களை நாம் கணக்கில்லாமல் சுரண்டி வருகிறோம். வளர்ச்சி என்பதை காரணம் காட்டி, காடுகள், மலைகள், கடல்கள் ஆகியவற்றை அழித்து வருகிறோம்.

நமது செயல்களுக்கு இதுவரை பொறுமைக் காத்த இயற்கை, தற்போது எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளது. அதன் விளைவாகவே, பருவநிலை மாறுபாடு, கடும் வறட்சி, பேரிடர் நிகழ்வுகள் ஆகிய அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த உலகில் மனிதக்குலம் நீடித்திருக்க வேண்டும் என்றால், சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, உலக நாடுகளும் தங்களின் பொறுப்பினை உணர்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு சையது அக்பருதீன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x