Published : 19 Jun 2018 09:57 AM
Last Updated : 19 Jun 2018 09:57 AM

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தொடர்பை இழந்துவிட்ட தென் இலங்கை: புதுப்பிக்கும் முயற்சியில் இலங்கை வானொலி தீவிரம்

இசை, சினிமா, கச்சேரி போன்றவற்றில் தென்னிந்தியாவுடன் தென் இலங்கையானது தனது தொடர்புகளை இழந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த தொடர்பை புதுப்பிக்கும் முயற்சி யில் இலங்கை வானொலி இறங்கியுள்ளது.

தென்னிந்தியத் திரைப்படங்களுக்கும், இலங்கைக்கும் முன்பு அதிக அளவில் தொடர்பு இருந்தது. இசை, சினிமா, இசைக் கச்சேரி போன்ற துறையைச் சேர்ந்தவர்கள் இலங்கையுடன் நெருங்கிய தொடர்பில் 1950-ம் ஆண்டு முதலே இருந்து வந்தனர். ஆனால் இந்தியா, இலங்கை கூட்டுத் தயாரிப்பில் ஏராளமான தமிழ் படங்களும் தயாரானதும் உண்டு.

1970-களில் நடிகர் சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா என்ற படத்தில் இடம்பெற்ற ‘என்னாடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இதே பாடலின் டியூனைப் பின்பற்றி சிங்களத்தில் உருவான பாடல்தான், ‘மாமா கண்ணமி கரகாரா பந்தலா’ என்ற பாடல். இலங்கையில் நடைபெறும் எந்த வொரு திருமண நிகழ்ச்சியானாலும் சரி, இசை நிகழ்ச்சியானாலும், மேடை நிகழ்ச்சியானாலும் சரி. இந்தப் பாடலை ஒலித்து முடிக்காமல் இசைக் கச்சேரி நடத்துபவர்களை ரசிகர்கள் இறங்க விடமாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பாடல் மிகவும் பிரபலம்.

இதேபோல இசையமைப்பாளர் இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி பட பாடலான மச்சானைப் பாத்தீங்களா என்ற பாடலின் டியூனைப் பின்பற்றி சிங்களத்தில் ‘சுது அசு பிட நகலா’ என்ற பாடலும் மிகவும் பிரபலமானதாக உள்ளது. அப்போதெல்லாம் தமிழில் ஹிட்டாகும் பாடல்களை அப்படியே சிங்களத்தில் தயாரித்து வெளியிடுவது அங்குள்ள இசையமைப்பாளர்களுக்கு வாடிக்கையாக இருந்தது. ஆனால் இது தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதாக இலங்கை வர்த்தக ஒலிபரப்பு கழகத்தின் (முந்தைய ரேடியோ சிலோன்) வானொலி மூத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விஷ்ணு வாசு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “முன்பெல்லாம் ஹிந்திப் படங்களின் இசையின் தாக்கம் சிங்கள இசையில் இருந்தது. அதைப் போலவே தென்னிந்தியப் படங்களின் தாக்கமும் சிங்களத்தில் வெகுவாகக் காணப்பட்டது. ஆனால் தென்னிந்தியப் படங்களுக்கும், சிங்கள இசை, கலை களுக்குமான தொடர்பு குறைந்த அளவிலேயே பிரபலமாகியிருக்கிறது. நான் தற்போது இலங்கை வானொலிக்காக நாத சித்தம் என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வருகிறேன்.

தென்னிந்தியாவுக்கும், தென் இலங்கைக்குமான கலையுலகத் தொடர்பை வெளிக்கொண்டு வருவதே எங்கள் நோக்கமாகும். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரால் தென் இந்தியா - தென் இலங்கைக்கான தொடர்பு முற்றி லும் இழந்துவிட்டது. அதை மீட்கவேண்டும். 1950 முதல் தமிழ்ப் பட இசையின் தாக்கம் தென் இலங்கையில் அதிகமாக இருந்தது. குறிப்பாக எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய பாபநாசம் சிவனின் ‘தீன கருணாகரனே நடராஜா’ பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தப் பாடலைப் பின்பற்றி சிங்களத்தில், ‘ராஜா சங்கபோ ஹிசா தீ’ என்ற பாடல் வெளிவந்து பிரபலமடைந்தது. இந்த இசை தொடர்பு இப்போது விடுபட்டுவிட்டது. இதை மீட்கும் முயற்சியில் நாங்கள் இருக்கிறோம். இந்தி நடிகர் ஷாருக் கான், தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு, மலையாளம் நடிகர்களின் படங்கள் இங்கு பிரபலம்” என்றார்.

இலங்கை செய்தித் துறை இயக்குநர் ஜெனரல் சுதர்சன குணவர்த்தனே கூறும்போது, “இலங்கையில் அரசியல், அரசமைப்புச் சட்ட விதிகளில் சமரசம் செய்துகொள்வது பற்றி இப்போது பேசி வருகிறார்கள். ஆனால் இலங்கையிலும், தென் இந்தியாவிலும் எங்களைக் கலாசார ரீதியாக இணைக்கும் விஷயங்கள் அதிகம் உள்ளன. அந்த இணைப்புகளை ஆராய் தல் என்பது மக்களின் இதயங்களுடனும், மனதுடனும் பேசுவதற்கான முயற்சியாகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x