Published : 26 Jun 2018 07:13 AM
Last Updated : 26 Jun 2018 07:13 AM

ஊதிய உயர்வு, நிரந்தப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் இலங்கையில் போராட்டம்: 50 லட்சம் தபால்கள் தேக்கம்

இலங்கையில் தபால் சேவை தொடங்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இலங்கையில் கொழும்பு, காலி, மாத்தறை, திரிகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 6 இடங்களில் அஞ்சல் அலுவலகங்கள் 1815-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

ஆசியாவிலேயே முதன் முறையாக 1838-ம் ஆண்டு குதிரை வண்டி தபால் சேவையும், 1850-ம் ஆண்டு அவசர தபால் சேவை புறாக்கள் மூலமும் அனுப்பப்பட்டன. 1865-ல் ரயில் மூலம் தபால்கள் அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக கப்பல், விமானம், பேருந்துகள் மூலம் தபால்கள் கொண்டு செல்லப்பட்டன. தபால் சேவை 2000-ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட் டது.

இந்நிலையில் ஊதிய உயர்வு, நிரந்தரப் பணி நியமனம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை தபால் ஊழியர்கள் ஜூன் 11-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

இதனால் அனைத்து தபால் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் இருந்து ரயில் மூலமாக வெளிமாவட்டங்களுக்கு தபால்களை அனுப்பி வைக்கும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தபால், பார்சல் விநியோகம் உள்ளிட்ட எந்தெவொரு சேவையும் நடைபெறாததால் சுமார் 50 லட்சம் தபால்கள் மற்றும் பார்சல்கள் தேங்கி உள்ளன. இதனால் இலங்கை முழுவதும் அஞ்சல் துறை முற்றிலுமாக முடங்கி உள்ளது.

முன்னதாக இலங்கை அரசுடன் தபால் ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. வேலைநிறுத்தப் போராட்டத்தினால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தபால் ஊழியர்களின் போராட்டத்துக்கு இலங்கையில் உள்ள அரசு வங்கிகள், கல்வி நிலையங்கள், ரயில்வே மற்றும் துறைமுக ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x