தாய்லாந்து பிரதமரானார் ராணுவ தளபதி

தாய்லாந்து பிரதமரானார் ராணுவ தளபதி
Updated on
1 min read

தாய்லாந்து நாட்டின் பிரதமராக அந்நாட்டு ராணுவ தளபதியான ப்ரயுத் சான் ஓ சா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து ராணுவத்தின் தளபதியாக இருப்பவர் ப்ரயுத் சான் ஓ சா (60). இவரால் கடந்த மே மாதம் 22ம் தேதி பிரதமர் பதவியில் இருந்து யிங்லக் ஷினவத்ரா தூக்கியெறியப்பட்டார்.

தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை நடத்தி வரும் 'நேஷனல் கவுன்சில் ஃபார் பீஸ் அண்ட் ஆர்டர்' எனும் ராணுவ அமைப்பு அக்டோபர் 2015ம் ஆண்டு வரை தேர்தல் நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து தாய்லாந்தை ஜனநாயகத்திற்குத் திரும்பக் கோரி வலியுறுத்தினாலும், அதனை ராணுவம் மதிக்கவில்லை.

செப்டம்பரில் ராணுவத் தளபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெறும் ப்ரயுத், முன்னாள் பிரதமர் தக்ஸின் ஷினவத்ராவின் எதிர்ப்பாளர் ஆவார். அவரின் செல்வாக்கைத் துடைத்தெறியவே ப்ரயுத் பிரதமர் பதவியை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் அரசியல் சச்சரவுகளை முடிவுக்குக் கொண்டு வரவே பிரதமர் பதவியை எடுத்துக்கொண்டிருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. தாய்லாந்து நாடாளுமன்றத்தில் 197 வாக்குகளுக்கு 191 வாக்குகள் பெற்று ப்ரயுத் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். இதர ஆறு பேர் வாக்களிக்கவில்லை.

ராணுவ ஆட்சியின்போது சட்டம், மனித உரிமைகள் போன்றவை அதிகளவில் அங்கு மீறப்பட்டுள்ளன. அடுத்த தேர்தல் வந்து வேறொருவர் புதிதாகப் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டாலும், மீண்டும் ராணுவ ஆட்சிதான் அங்கு நடக்கும். இந்த நிலை மாறாது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in