Published : 22 Aug 2014 20:18 pm

Updated : 22 Aug 2014 20:18 pm

 

Published : 22 Aug 2014 08:18 PM
Last Updated : 22 Aug 2014 08:18 PM

மதுரை உரையில் ஜெயலலிதா சொன்ன மூன்று குட்டிக்கதைகள்

முல்லை பெரியாறு அணியின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்காக மதுரையில் பாசன விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா தனது சாதனையை விளக்கும் விதமாகவும் அதே சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்யும் வகையிலும் குட்டிக் கதைகளைக் கூறினார்.

குட்டிக்கதை 1: அலைகளாகவும் கரையாகவும் செயல்பட்ட அரசு:

நமக்குரிய உரிமைகளை நாம் வென்றெடுக்க வேண்டுமென்றால், அதற்குரிய உறுதியும், விடாமுயற்சியும் தேவை.

ஒரு குருவும், அவரது சீடர்களும் கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சியினை பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

ஒரு சீடனைப் பார்த்து, “உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டார் குரு.

அதற்கு அந்தச் சீடன், “திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளின் விடாமுயற்சி தெரிகிறது” என்றான்.

இதே கேள்வியை மற்றொரு சீடனிடம் கேட்டார் குரு.

அதற்கு அந்தச் சீடன், “துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் துன்பங்கள் சிதறிப் போகும்” என்றான்.

இவற்றை கேட்ட குரு “சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு” என்று சொன்னார்.

இந்த கதையில் வருவது போல், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில், எனது தலைமையிலான அரசு அலைகளாயும், கரையாயும் இருந்து செயல்பட்டதால் தான் இன்று நாம் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

குட்டிக்கதை 2 : மன்னர்... யானை... இளைஞன்

ஒரு மன்னர் யானை மீது நாட்டை சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஒவ்வொரு முறையும் மன்னர் ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்கு போகும் போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேலே நடக்க முடியாமல் நின்று விடுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.

அந்த இளைஞன் குறித்து மன்னர் விசாரித்த போது, அந்த இளைஞன் சிறு சிறுவேலைகளை செய்து, கிடைப்பதை உண்டு கவலை ஏதுமின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பலம் வாய்ந்த யானையை, ஒரு சாதாரண இளைஞன் எப்படி இழுத்து நிறுத்துகிறான் என்று மன்னர் அமைச்சரிடம் வினவினார்.

அதற்கு அமைச்சர், இதற்கு காரணம் அவனது மன வலிமை என்றார்.

அவனது மன வலிமையை எப்படி மாற்றுவது என மன்னர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர், “தினமும் அவனுக்கு ஒரு தங்கக் காசு சம்பளம் கொடுங்கள். மாலையில் அருகில் உள்ள திருக்கோயிலில் விளக்கு ஏற்றுவது உன் பணி என்றும், அதற்கான சம்பளமே இந்த தங்கக் காசு என்றும் சொல்லுங்கள்” என்று கூறினார். அந்த இளைஞனுக்கு அவ்வாறே விளக்கு ஏற்றும் பணி வழங்கப்பட்டது. தினமும் தங்கக் காசு சம்பளம் பெற்றவுடன், எவ்வளவு தங்கக் காசுகள் தன்னிடம் சேர்ந்து இருக்கின்றன என்றும், 100 காசுகள் சேர்க்க இன்னும் எத்தனை நாட்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

ஒரு மாதம் கழித்து அவ்வழியாக மன்னர் யானை மீது சென்றார். அப்போதும் அந்த இளைஞன் யானை வாலைப் பிடித்து இழுத்தான். ஆனால் யானையை நிறுத்த முடியவில்லை. வாலைப் பிடித்தபடியே யானையின் இழுப்பில் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தான்.

இது எவ்வாறு நடந்தது என்று மன்னர் வினவினார். அதற்கு அமைச்சர், “காசைச் சேர்க்க ஆரம்பித்த உடன் அவனது கவனம் சிதறிவிட்டது. அவனுடைய மனம் பணத்தின் பக்கம் போய்விட்டது. எனவே, அவனது பலம் போய்விட்டது” என்றார்.

இந்தக் கதையில் வருபவரைப் போல் கருணாநிதியின் மனம் ஸ்பெக்ட்ரம் பக்கம் இருந்ததால், தமிழர் நலன் பற்றி கருணாநிதி கவலை கொள்ளவில்லை.

குட்டிக்கதை 3 : மயங்கி விழுந்த கடவுள்

ஒரு ஏழையின் சிரிப்பைக் காண விரும்பிய கடவுள், அந்த ஏழையின் முன் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு, “பணம், செல்வம், தங்கம், வைரம்” என்று ஆசையோடு கூறினான் அந்த ஏழை.

உடனே, கடவுள் தனது வலது கை சுட்டு விரலை நீட்டினார். அங்கிருந்த பீரோ தங்கமாக மாறியது.

ஆனால் ஏழை எதுவும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான். கடவுள் மறுபடியும் விரலை நீட்ட, அங்கிருந்த மேஜை தங்கமானது. அப்போதும் அந்த ஏழைக்கு திருப்தி ஏற்படவில்லை.உடனே, கடவுள் அந்த அறையில் இருந்த அத்தனைப் பொருட்களையும் வேக வேகமாக தங்கமாக்கினார்.அப்போதும் அந்த ஏழை சிரிக்கவில்லை.சோர்ந்து போன கடவுள், “இன்னும் உனக்கு என்ன தான் வரம் வேண்டும்?”என்று கேட்டார்.

அதற்கு அந்த ஏழை, “எனக்கு அந்த விரல் வேண்டும்” என்றான். அந்த ஏழையின் பேச்சைக் கேட்டதும், கடவுள் மயங்கி விழுந்துவிட்டார்.

இந்தக் கதையில் வருவதைப் போல், வாழ்வளித்த தமிழர்களை அழிக்க நினைத்தவர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.

என்று தனது உரையில் 3 குட்டிக் கதைகளைக் கூறினார் முதல்வர் ஜெயலலிதா

முல்லை பெரியாறுமதுரைஜெயலலிதாகுட்டிக்கதைகள்விவசாயிகள்கருணாநிதிதமிழகம்கேரளா

You May Like

More From This Category

More From this Author