Published : 30 Aug 2014 10:32 AM
Last Updated : 30 Aug 2014 10:32 AM

உக்ரைன் ராணுவ வீரர்களை விடுவிக்க புதின் உத்தரவு

உக்ரைன் ராணுவ வீரர்களை விடுவிக்குமாறு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு உக்ரைன் பகுதியில் உக்ரைன் ராணுவ வீரர்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்துள்ளனர். அங்குள்ள கிராமங்களில் முகாமிட்டிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் பலரையும் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ளனர்.

இதையடுத்து ரஷ்ய ராணுவம் தனது பீரங்கிகள் உள்ளிட்ட வாகனங்களுடன் தங்கள் எல்லைக்குள் புகுந்தது விட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியது. இதையடுத்து சில மணி நேரங்களி லேயே உக்ரைன் ராணுவ வீரர்களை விடுவிக்குமாறு கிளர்ச்சியாளர்களுக்கு புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய ராணுவ வீரர்கள் ஆயிரம் பேர் உக்ரைனுக்குள் புகுந்துள்ளனர். இவர்கள் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்று நேட்டோ குற்றம்சாட்டியுள்ளது. செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் இதனை உறுதி செய்துள்ள தாகவும் நேட்டோ கூறியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் இணையதளத்தில் புதினின் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அதில், தேவையற்ற மோதல்களையும், உயிரிழப்பு களையும் தவிர்க்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் உக்ரைன் ராணுவ வீரர்களை விடுவிக்க வேண்டுமென்று கிளர்ச்சியா ளர்களுக்கு நான் அழைப்புவிடுக்கி றேன் என்று கூறியுள்ளார்.

எனினும் ரஷ்ய ராணுவம் ஆயதங்களுடன் தங்கள் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக எழுந்துள்ள உக்ரைனின் குற்றச் சாட்டுக்கு புதின் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை.

புதின் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ள கிளர்ச்சியாளர்கள், அதே நேரத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்கள் ஆயுதங்களை முழுமையாக கைவிட்டால் மட்டுமே அவர்களை தாங்கள் சுற்றி வளைத்துள்ள பகுதியில் இருந்து வெளியேற அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.

முன்னாள் சோவியத் யூனி யன் நாடான உக்ரைன் ஐரோப்பிய யூனியனுடன் நெருக்க மாக செயல்படுவதா அல்லது ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவதா என்பதுதான் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். உக்ரைன் அரசு ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமாக உள்ள நிலையில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

உக்ரைனில் நிலைமை மோசமாகி வருவது குறித்து ஐநா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கவலை தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் மோதல்களால் 2,600 பேர் வரை உயிரிழந்துள்ளனர். எனவே பேச்சு நடத்தி பிரச்சினையை தீர்க்க வேண்டும். எல்லையில் ஆயுதங்களை குவிப்பதை இரு தரப்புமே நிறுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x