Last Updated : 18 Apr, 2018 12:42 PM

 

Published : 18 Apr 2018 12:42 PM
Last Updated : 18 Apr 2018 12:42 PM

லண்டனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ராணி 2-ம் எலிசபெத்துடன் சந்திப்பு:காமென்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

ஐரோப்பிய நாடுகளுக்கு 5 பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஸ்வீடன் பயணத்தைமுடித்து, இந்திய நேரப்படி இன்று அதிகாலை லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்வீடன், இங்கிலாந்து, ஜெர்மன் நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் மோடி கடந்த 16-ம் தேதிபுறப்பட்டார். ஸ்வீடன் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோபனுடன் தொழில், வர்த்தகம், இருதரப்பு உறவுகள் மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினார்கள். ஸ்டாக்ஹோம் நகரில் நடந்த இந்தியா-நார்டிக் மாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

ஸ்வீடனில் தனது நிகழ்ச்சிகளை முடித்த பிரதமர் மோடி, அங்கிருந்து இங்கிலாந்து புறப்பட்டார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஹீத்ரு நகரத்துக்குப் பிரதமர் மோடி சென்று சேர்ந்தார். இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் பிரதமர் மோடியை விமானநிலையத்தில் பூங்கொடுத்து வரவேற்றார்.

அதன்பின் அமைச்சர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் வளர்ந்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய பொருளாதார ஆதாயங்களை, முன்னேற்றங்களைக் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

ஹீத்ருவில் இருந்து லண்டன் செல்லும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்து பிரதமர் தெரசே மே உடன் இன்று பிரதமர் மோடி டவுனிங்க் சாலையில் உள்ள அவரின் மாளிகையில் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இரு தலைவர்களும் இருநாடுகளுக்கு இடையிலான பரஸ்பர நலன்கள் தொடர்பான விஷயங்கள், பிரிவினைவாதம், எல்லை கடந்த தீவிரவாதம், விசா, குடியுரிமை தொடர்பான விஷயங்கள் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இங்கிலாந்தில் சட்ட விரோதமாக குடியேறி இருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2014-ம் ஆண்டு முடிந்தவிட்டது. அதை அதிகாரப்பூர்வமாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர இரு தலைவர்களும் ஒப்பந்தம் செய்வார்கள். இதுதவிர இரு நாடுகளுக்கும் இடையே 12-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.

அதன்பின் பிரதமர் மோடி லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்குச் செல்கிறார். அங்கு 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகிழ்ச்சியில் இந்தியர்களுடனும், பிற அறிவியல் ஆய்வாளர்களுடனும், கண்டுபிடிப்பாளர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

லண்டனில் யோகா, ஆயுர்வேதாவை அடிப்படையாக வைத்து, ஆயுர்வேதா மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுர்வேதா மையத்தை இளவரசர் சார்லஸ் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி லண்டன் சென்றிருந்தபோது, தேம்ஸ் நதிக்கரையில் பசவேஸ்வராவின் சிலையை திறந்துவைத்தார். அந்த சிலையை பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

லண்டன் வாழ் இந்தியர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை சந்தித்து பிரதமர் மோடி பேசுகிறார்.

அதன்பின் காமென்வெல்த் அமைப்பில் உள்ள 52 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். காமென்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் தெரசா மே விருந்து அளிக்கிறார். அதன்பின் லண்டனில் இருந்து இந்தியா புறப்படும் மோடி, வரும் வழியில் ஜெர்மனியின் பெர்லின் நகரில் இறங்கி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்செலா மெர்க்கலை சந்தித்துப் பேச உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x