Published : 10 May 2024 08:21 AM
Last Updated : 10 May 2024 08:21 AM

“இந்திய தேர்தலில் தலையிடவில்லை” - ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு

ஜோ பைடன் (இடது), விளாடிமிர் புதின் (வலது)

வாஷிங்டன்: தேர்தல் நேரத்தில் இந்தியாவை நிலைகுலையச் செய்ய முயற்சிப்பதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா அண்மையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மக்களவை தேர்தல் நடைபெறும் நேரத்தில், மதச்சுதந்திர விதிமுறை மீறல் குற்றச்சாட்டை சுமத்தி இந்தியாவை நிலைகுலைய செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டுக்கு தற்போது அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “நிச்சயமாக இல்லை. நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டுத் தேர்தல் விவகாரத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை” என்றார்.

காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சியில் இந்தியர்களுக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டு தவறானது என்றும் இதற்காக எந்த நம்பத்தகுந்த ஆதாரத்தையும் இதுவரை அமெரிக்கா வழங்கவில்லை என்றும் ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மில்லர், “நிரூபிக்கப்படும் வரை அவை குற்றச்சாட்டுகளே. அது தொடர்பான குற்றபத்திரிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

யார் வேண்டுமானாலும் சென்று அதனை படித்துக் கொள்ளலாம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதுகுறித்து நான் எதுவும் பேசமுடியாது” என்று மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x