Published : 27 Apr 2024 04:11 PM
Last Updated : 27 Apr 2024 04:11 PM

‘ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு’ - ரஃபா தாக்குதலுக்கு முன் பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் கெடு

டெல் அவிவ்: காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் எல்லைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ள ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கவுள்ள நிலையில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு கடைசி வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இந்நிலையில், காசாவின் வடக்கு, மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியதுபோல் தற்போது தெற்கில் உள்ள ரஃபா எல்லையில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதனையொட்டி பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் படைகளுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக ஊடகச் செய்தி வெளியாகியுள்ளது. டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிகையில் இச்செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில், கடைசிகட்டப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் - எகிப்து உயர்மட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பிணைக் கைதிகள் விடுதலை தொடர்பான ஆலோசனைக்காக எகிப்து குழுவினர் இஸ்ரேல் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஃபாவில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க வேண்டாம் என எகிப்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கே தரைவழி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய அளவில் மனித உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தும் உள்ளது,

ஆனால், ரஃபா தாக்குதலில் இஸ்ரேல் நாளுக்கு நாள் கூடுதலாக ஆர்வம் காட்டி வருகிறது. முன்னதாக, கடந்த மார்ச் 15 ஆம் தேதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட செய்தியில் ரஃபாவில் ராணுவ தாக்குதலுக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துவிட்டார் எனத் தெரிவித்திருந்தது. அதன்பின்னர் ஒரு வீடியோவில் பேசிய நெதன்யாகு, “ஹமாஸை வெற்றி கொள்ள ரஃபா எங்களுக்கு தேவை. ரஃபாவில் பதுங்கியுள்ள ஹமாஸ்களை அழிக்காமல் அது சாத்தியப்படாது. அது நிச்சயம் நடக்கும். அதற்கு ஒரு நாள் குறிக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x