Published : 08 Feb 2018 07:51 AM
Last Updated : 08 Feb 2018 07:51 AM

மாலத்தீவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கைது எதிரொலி: அரசியல் தலைவர்களை விடுவிக்கும் உத்தரவு ரத்து- அவசர நிலை பிரகடனத்தால் பதற்றம் அதிகரிப்பு

மாலத்தீவில் தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் 9 பேரை விடுவிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரும்ப பெற்றனர். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டது. அதை அதிபர் அப்துல்லா யாமீன் ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன், கடந்த திங்கள் கிழமை அவசர நிலையை 15 நாட்களுக்குப் பிரகடனப்படுத்தினார். அதனால் ராணுவத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. வேறு எந்த அரசியலமைப்பும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி முடக்கப்பட்டன.

அவசர நிலை பிரகடனப் படுத்திய சில மணி நேரங்களில் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல் சயீது மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரை போலீ ஸார் கைது செய்தனர். இதனால் மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டது.

பதற்றம் அதிகரித்த நிலையில், முகமது நசீத் உட்பட 9 பேரை விடுவிக்கும் முந்தைய உத்தரவை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டனர். இதை அதிபர் யாமீன் வரவேற்றுள்ளார். ஆனால், முகமது நசீத் கடுமையாக எதிர்த்துள்ளார்.

இந்நிலையில், மாலத்தீவுக்கு உடனடியாக ராணுவத்தை அனுப்பி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவ வேண்டும். தூதர்களை அனுப்பி அதிபர் யாமீனுடன் பேசி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவுக்கு முன்னாள் அதிபர் முகமது நசீத் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், மாலத்தீவு விவகாரங்களில் இந்தியா தலையிட கூடாது என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியா - சீனா போட்டி

முகமது நசீது கடந்த 2012-ம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்படும் வரை இந்தியாவுக்கு நெருக்கமான நாடாகவே மாலத்தீவு இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவை அரசு (அதிபர் யாமீன்) மதித்து செயல்பட வேண்டும் என்று இந்தியா கருத்துத் தெரிவித்திருந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு அதிபராக அப்துல்லா யாமீன் பதவியேற்ற பின், சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டார். தலைநகர் மாலேவுக்கு அருகில் உள்ள தீவு ஒன்றை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்குத் குத்தகைக்கு கொடுத்தார். அத்துடன் மாலத்தீவில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள சீனாவுக்கு அனுமதி அளித்தார். அத்துடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ள மாலத்தீவுடன் சீனா ஒப்பந்தமும் செய்து கொண்டுள்ளது.

எனவே, மாலத்தீவு விவகாரம் இந்தியா - சீனாவின் பனிப்போராகவே இப்போது பார்க்கப்படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு இந்தியா - இடையே பலத்த போட்டி நிலவுவதாக கூறுகின்றனர். அதற்கேற்ப மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட கூடாது என்று சீன ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கடந்த செவ்வாய்க்கிழமை சீன தரப்பில் கூறும்போது, ‘‘மாலத்தீவில் வசிக்கும் சுமார் 4 லட்சம் மக்கள், தங்கள் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் குழப்பத்துக்குத் தீர்வு காணும் திறமைப் படைத்தவர்கள். யாருடைய உதவியும் இன்றி அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார்கள்’’ என்று நேரடியாகவே தெரிவித்தது.

இதனால் தென் சீன கடல் பகுதிக்கு சொந்தம் கொண்டாடி சீனா ஆதிக்கம் செலுத்தி வருவது போல், விரைவில் மாலத்தீவிலும் ஆதிக்கம் செலுத்தலாம் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக கல்வியாளர் டேவிட் பிரூஸ்டர் அச்சம் தெரிவித்துள்ளார்.- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x