Published : 15 Feb 2018 12:32 PM
Last Updated : 15 Feb 2018 12:32 PM

தென் ஆப்பிரிக்காவை ஆட்டிப்படைக்கும் இந்திய குப்தா குடும்பம்: அதிபரை இயக்கி பல கோடி குவித்ததாக புகார்

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ள போதிலும், அவரை பயன்படுத்தி பெருமளவு முறைகேடு செய்து பல கோடி ரூபாய் செல்வம் குவித்த இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்திற்கு எதிராகவும் மக்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த 2009-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்க அதிபராக ஜேக்கப் ஜுமா பதவியேற்றார். அதற்கு முன்பாக அவர் துணை அதிபராக இருந்தபோது 1999-ல் ராணுவத்துக்கு ஆயுதங்களைக் கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2014-ம் ஆண்டில் அரசுப் பணத்தில் சொகுசு வீடு கட்டியது, அரசு ஒப்பந்தங்களை குப்தா குழுமத்துக்கு முறைகேடாக ஒதுக்கியது உள்ளிட்ட பல்வேறு ஊழல் விவகாரங்களில் ஜுமா மீது குற்றம் சாட்டப்பட்டது. எதிர்கட்சிகளின் போராட்டத்தையடுத்து, தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா நேற்று (புதன்கிழமை) அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

அதிபராக இருந்த ஜுமாவின் ஊழல்களுடன் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் முறைகேடுகள் பற்றியும் அங்கு பெரிய அளவில் புகார்கள் எழுந்துள்ளன. குப்தா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் நேற்று இரவு சோதனையும் நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த குப்தா?

தென் ஆப்பிரிக்காவில் பெரிய செல்வந்த குடும்பத்தில் ஒன்று குப்தா குடும்பம். தென் ஆப்ரிக்காவில் 1993ம் ஆண்டு வெள்ளை இன ஆதிக்க அரசு பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு அனைத்து மக்களும் அரசியலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் நடந்த பெரிய அளவிலான பொருளாதார மாற்றத்தால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு குடியேற ஆர்வம் காட்டினர்.

இதில் குப்தா குடும்பத்தினரும் ஒன்று. அதுல், ராஜேஷ், அஜய் ஆகிய மூன்று சகோதரர்களும், 1993ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தென் ஆப்ரிக்கா சென்று அங்கு குடியேறினர். சுரங்கம், விமான சேவை, மின்சார உற்பத்தி, தொழில்நுட்பம், கணினி மயமாக்ல், ஊடகம் என தற்போது மிகப் பெரிய தொழில் சாம்ராஜியத்திற்கு சொந்தகாரர்களாக திகழ்கின்றனர். தென் ஆப்ரிக்காவில் குடியேறியது முதலே உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் கைகோர்த்துக் கொண்டு தங்கள் தொழிலை வளப்படுத்திக் கொண்டதாக புகார் உள்ளது.

குறிப்பாக தற்போது பதவி விலகியுள்ள ஜேக்கப் ஜுமாவுடம், குப்தா குடும்பத்தினருக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அதிபர் ஜுமாவின் மகன், மகள், மனைவிகளில் ஒருவர் என அவரது சொந்தங்கள், குப்தா குடும்பத்துடன் இணைந்து பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவரது கட்சிக்கு குப்தா குடும்பத்தினர் தாராளமாக நிதியுதவி செய்துள்ளனர்.

பதிலுக்கு அரசு ஒப்பந்தங்கள் அனைத்தும் குப்தா குடும்பத்திற்கு தரப்பட்டுள்ளது. அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு குப்தா குடும்பத்தினர் தங்கள் தொழிலை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏறக்குறைய நாட்டையே பின்னால் இருந்து இயக்கும் அளவிற்கு குப்தா குடும்பம் செயல்பட்டதாக தென் ஆப்ரிக்க எதிர்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.

குப்தா குடும்பத்தினர் பல கோடி ரூபாய் லஞ்சம் தர முற்பட்டதாக முன்னாள் துணை நிதியமைச்சரான மெஸிபிஸி ஜோனாஸ் 2016ம் ஆண்டு பகிரங்கமாக புகார் தெரிவித்தார். இதுபோலவே ஜுமா மற்றும் குப்தா குடும்பமும் அரசு ஒப்பந்தங்களை முறைகேடாக பெற்று பல கோடி ரூபாய் பெற்றதாகவும் எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

2017ம் ஆண்டு அரசுக்கு வந்த ஒரு லட்சம் இமெயில்கள் குப்தா குடும்பத்தின் செல்வாக்கால் வெளியானதாகவும் கூறப்படுகிறது. அரசு ஒப்பந்தங்களை பெற்றுக் கொண்டு அதற்கு பிரதி பலனாக ஜுமா குடும்பத்தினருக்கு சட்டவிரோதமான முறையில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இவை எல்லாம் தென் ஆப்பிரிக்க அரசியலில் மட்டுமின்றி அரசு நிர்வாகத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான், ஜுமா மட்டுமின்றி குப்தா குடும்பத்தினருக்கு எதிராக தென் ஆப்ரிக்காவில் பெரிய அளவில் மக்கள் போராட்டமும் வெடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x