Published : 06 Aug 2014 10:00 AM
Last Updated : 06 Aug 2014 10:00 AM

இலங்கை அரசுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்: தூதரக நிகழ்ச்சியில் சிங்கள அமைப்பினர் ரகளை எதிரொலி

போரில் கணவர்களை இழந்த பெண்களின் குறைகளை கேட்டறிவதற்காக அமெரிக்க தூதரகம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் புகுந்து சிங்கள அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர்.

இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இலங்கை முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான போர், 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரின் இறுதி நாட்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதில், ஏராளமான பெண்கள் தங்களின் கணவனை இழந்து தவித்து வருகின்றனர். தங்களின் கணவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியாமல் பலர் தவித்து வருகின்றனர். இது தவிர பலரது குடும்பங்களில் உறவினர்கள் காணாமல் போயுள்ளனர்.

சொந்தங்களை இழந்து தவித்து வரும் இவர்களை அமெரிக்க தூதரக அதிகாரிகள் சந்தித்து குறைகளை கேட்டறிவதற்கான கூட்டம், தலைநகர் கொழும்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால், புத்த துறவிகள் தலைமையிலான சிங்கள அமைப்பினர் கூட்டத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். சிலர் அமெரிக்க தூதரக அதிகாரிகளை மிரட்டினர். இதையடுத்து கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “கூட்டத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட சிங்கள அமைப்பினரை போலீஸார் தடுக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட அந்நாட்டு அரசு முயற்சிக்க வேண்டும். மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமக்களின் பேச்சுரிமை, கூட்டம் நடத்துவதற்கான உரிமையை பாதுகாக்க வேண்டும்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்கு வந்திருந்த தமிழர்கள்,தங்களின் ஊருக்கு திரும்பிச் செல்லும்வரை போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ் பத்திரிகையாளர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி முகாமை, இதேபோன்று சிங்கள அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டு தடுத்தனர். அதற்கும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருந்தது. பத்திரிகையாளர்களை துன்புறுத்தக்கூடாது. அவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் மீண்டும் அதே போன்ற செயல் அரங்கேறியுள்ளது. போர்க் குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x