Published : 19 Dec 2023 06:44 AM
Last Updated : 19 Dec 2023 06:44 AM

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு விஷம்? - கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

புதுடெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு (67) அடையாளம் தெரியாதநபரால் விஷம் வைக்கப்பட்டதாகவும் கராச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெறுவதாகவும் தகவல் கள் வெளியாகி உள்ளன.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்தவர் நிழல் உலக தாதாதாவூத் இப்ராஹிம். கடந்த 1993-ம்ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட இவர் இந்தியாவில் இருந்து தப்பியோடிவிட்டார். மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 1,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக இந்தியாவில் தேடப்படும் தீவிரவாதிகளின்பட்டியலில் தாவூத் முதலிடத்தில்உள்ளார். அமெரிக்க அரசும் அவரைசர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவர் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் தாவூத் பதுங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபே கூறியிருக்கிறார். இந்த சூழலில் தாவூத் இப்ராஹிமுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் மூலம் விஷம் வைக்கப்பட்டதாகவும் கராச்சி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக இந்தியாவின் முன்னணி ஊடகமான இண்டியா டுடே வெளியிட்ட செய்தியில், “கராச்சி மருத்துவமனையில் தாவூத்சிகிச்சை பெறுகிறார். அவர் இருக்கும் தளத்தில் வேறு எந்த நோயாளியும் அனுமதிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினர் மட்டுமே உள்ளனர். தாவூத்தின் உடல் நலம் தொடர்பாக மும்பையில் உள்ள அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

தாவூத்துக்கு விஷம் வைக்கப்பட்டு, அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருப்பதாக எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.

பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் அன்வர் அல் ஹக் காகரின் ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியான பதிவு என்ற பெயரில் ஒரு பதிவு சமூக வலைதளத்தில் உலா வருகிறது. அதில், “மனித குலத்தின் மீட்பர், பாகிஸ்தான் மக்களின் இதயங்களை கவர்ந்தவர், மேன்மைமிகு தாவூத் இப்ராகிம் மர்ம நபரால் விஷம் வைக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். கராச்சி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இணையவாசிகள் ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட 'எக்ஸ்' வலைதள கணக்கு, பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் காகரின் வலைதள கணக்கு கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

தாவூத் விவகாரம் தொடர்பாக இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் தாவூத் ஏதோ ஒரு காரணத்தால் மரணமடைந்து விட்டதாக செய்திகள்பரவும். கடந்த 2016-ல் தசையழுகல்நோய் காரணமாக தாவூத்தின் இருகால்களும் வெட்டி எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது வதந்தி என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டில் மாரடைப்பால் தாவூத் உயிரிழந்து விட்டதாகவும் மூளை புற்றுநோயால் அவர் மரணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் பரவின.கடந்த 2020-ம் ஆண்டில் கரோனாவைரஸால் தாவூத் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்பது பின்னர்தெரிய வந்தது. தாவூத்தை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் சுமார் 150 நபர்களை தாண்டிச் செல்ல வேண்டும். அவ்வளவு பாதுகாப்பான இடத்தில் அவர் வசிக்கிறார். அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. இது பெரும்பாலும் வதந்தியாகவே இருக்கும்.தற்போது வந்துள்ள செய்திகள் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறு இந்திய உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி சார்பில் இணையவழியில் நேற்றுமுன்தினம் இரவு சிறப்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதன்காரணமாக பாகிஸ்தான் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் சமூக வலைதளங்கள் முழுமையாக முடங்கின.

ஆனால் தாவூத் இப்ராஹிமுக்கு விஷம் வைக்கப்பட்டதாலேயே பாகிஸ்தானில் இணைய சேவை முடக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களில், தாவூத் இப்ராஹிம் தொடர்பாக எவ்வித செய்தியும் வெளியாகவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x