Published : 18 Jan 2018 11:59 AM
Last Updated : 18 Jan 2018 11:59 AM

அமெரிக்க ஊடகங்களுக்கு விருது அறிவித்துள்ள ட்ரம்ப்: போலி செய்திக்கான விருதைப் பெற்ற நியூயார்க் டைம்ஸ்

போலி செய்திகளுக்கான விருதை 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட நாள் முதலே அவர் தொடர்பான சர்ச்சை மிகுந்த கருத்துகள் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக ஊடகங்களை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிலும் குறிப்பாக சிஎன்என் செய்தி நிறுவனம், தி நியூயார்க் டைம்ஸ் ஆகியன பொய் செய்தியை வெளியிட்டு வருவதாக ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்திவந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 2-ம் தேதி ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இந்த வருடத்தின் நேர்மையற்ற, ஊழல் நிறைந்த ஊடகங்களுக்கான விருதை அறிவிக்க இருக்கிறேன். இந்த விருதுகள் பொய் செய்திகள், நேர்மையற்ற, தரமற்ற செய்திகளின் அடிப்படையில் வழக்கப்படுகிறது .. தொடர்ந்து காத்திருங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது அவ்விருதை அறிவித்திருக்கிறார். இந்த விருது விவரம் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு போலி செய்திகளுக்கான விருது வழக்கப்பட்டுள்ளது.

மேலும் நேர்மையற்ற, பொய் செய்திகள் போன்ற இதர பிரிவுகளின் முறையே ‘ஏபிசி’,’ சிஎன்என்’, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ட்ரம்பினால் விருது வழங்கப்பட்டுள்ள இப்பத்திரிகைகள் அனைத்தும் ட்ரம்பின், குடியேற்ற கொள்கை, முஸ்லிம் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள், மெக்சிகோ எல்லைப்புறத்தில் கட்டப்படவுள்ள எல்லைச் சுவர் போன்றவற்றை கடுமையாக விமர்சித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x