Published : 28 Nov 2023 08:56 AM
Last Updated : 28 Nov 2023 08:56 AM

மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு: போர் நிறுத்தம் நீட்டிப்பால் காசா மக்கள் நிம்மதி

காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

காசா நகர்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கட்கிழமை பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக சிறையில் இருந்து 33 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசாவில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 200க்கும் மேற்பட்டோரை விடுவிக்கும் வகையில் முதலில் 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அமெரிக்கத் தலையீடு, கத்தார், எகிப்து மத்தியஸ்தத்தின் விளைவாக இந்தப் போர் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று (திங்கள்) பின்னிரவு பெண்கள், குழந்தைகள் என மேலும் 11 இஸ்ரேலியர்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. பதிலுக்கு இன்று அதிகாலை 33 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேலிய சிறைகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு மேற்குக் கரையில் உள்ள ரமல்லா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து இரு தரப்பிலும் 4 முறை பிணைக் கைதிகள் மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்காலிகப் போர் நிறுத்தம் காரணமாக காசாவாசிகள் சற்றே நிம்மதியடைந்துள்ளனர். காசாவுக்கு கடந்த 4 நாட்களாக ஐ.நா.வின் நிவாரண வாகனங்கள் பெருமளவில் சென்றடைந்துள்ளன. இதற்கிடையில் இஸ்ரேல் வந்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் புனரமைப்புக்கு உதவுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை 62 பேர் விடுவிப்பு: கடந்த 7 ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட 240 பேரில் இதுவரை 62 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இஸ்ரேலியப் படைகளால் விடுவிக்கப்பட்டார். காசாவில் 2 இஸ்ரேலியர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களையும் மீட்கும் வகையில் இஸ்ரேல் போர் நிறுத்த நீட்டிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்த வாரம் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். போர் நிறுத்தம் மேலும் சில வாரங்களுக்காவது நீட்டிக்கப்பட அறிவுறுத்தும் வகையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x